1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: சனி, 18 பிப்ரவரி 2017 (15:31 IST)

நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வெற்றி ; ஆதரவு 122 ; எதிர்ப்பு 11

தமிழக சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அவருக்கு ஆதரவாக 122 பேரும், அவருக்கு எதிராக 11 பேரும் வாக்களித்துள்ளனர்.


 

 
தமிழக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி இன்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை கொண்டு வந்தார். ஆனால், ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் இல்லையேல் மற்றொரு நாளில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என திமுக எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கினார்கள். ஓ.பி.எஸ்-ஸும் ரகசிய வாக்கெப்பு நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
 
ஆனால், ஓ.பி.எஸ் உட்பட அனைவரின் கோரிக்கைகளையும் சபாநாயகர் தனபால் நிராகரித்து விட்டார். எனவே, திமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இருமுறை சபை ஒத்தி வைக்கப்பட்டது. 
 
அந்நிலையில், இன்று மதியம் 3 மணிக்கு மீண்டும் அவை கூடியது. அப்போது, திமுக தரப்பு ரகசிய வாக்கெடுப்பு கேட்டதால், அமளி ஏற்பட்டது. எனவே, ஸ்டாலின் உட்பட அனைத்து திமுக எம்.எல்.ஏக்களும் குண்டு கட்டாக வெளியேற்றப்பட்டனர்.
 
அதன்பின் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 122 எம்.எல்.ஏக்களும், எதிராக 11 பேரும் வாக்களித்தனர். இதன் மூலம் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.