ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 4 ஆகஸ்ட் 2017 (16:41 IST)

தினகரன் அதிமுகவின் அடிப்படை உறுப்பினரே இல்லை: தேர்தல் ஆணைய தகவலால் பின்னடைவு!

தினகரன் அதிமுகவின் அடிப்படை உறுப்பினரே இல்லை: தேர்தல் ஆணைய தகவலால் பின்னடைவு!

நாளை அதிமுக தலைமை அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களுடன் நுழைய உள்ளதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ள நிலையில் தேர்தல் ஆணையம் அளித்துள்ள ஒரு தகவல் அவருக்கு தற்போது பின்னடைவாக அமைந்துள்ளது.


 
 
அதிமுகவின் பொதுச்செயலாளர் யார் என்ற சந்தேகம் எல்லாருக்கும் உள்ளது. இந்த விவகாரம் தேர்தல் ஆணையத்தில் உள்ள நிலையில் தற்போது அதிமுகவின் பொதுச்செயலாளர் யார் என்ற சந்தேகம் நிலவி வருகிறது. இதனால் சுவாமிநாதன் கல்யாணம் சுந்தரம் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தேர்தல் ஆணையத்திற்கு சில கேள்விகளை எழுப்பியிருந்தார்.
 
அதாவது தேர்தல் ஆணைய ஆவணப்படி அதிமுக பொதுச்செயலாளர் யார்? துணை பொதுச்செயலாளர் யார்? அவர்கள் நியமிக்கப்பட்ட தேதி என்ன? எந்த அடிப்படையில் அவர்கள் நியமிக்கப்பட்டார்கள் என சுவாமிநாதன் கேள்வி எழுப்பியிருந்தார்.
 
இவரின் இந்த கேள்விகளுக்கு எழுத்து மூலமாக முதன் முதலில் பதில் அளித்த தேர்தல் ஆணையம், அதிமுகவின் பொதுச்செயலாளர் யார் என்பது இன்னமும் முடிவு செய்யப்படவில்லை என கூறியுள்ளது. மேலும் வாதங்கள் அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் முன்பு உள்ளதால் இப்போது எதையும் சொல்ல முடியாது என கூறியுள்ளது.
 
அதிமுகவின் பொதுச்செயலாளர் யார் என்பது இன்னமும் முடிவு செய்யப்படாத நிலையில் இருக்கும் போது சசிகலாவால் அதிமுகவில் சேர்க்கப்பட்டு துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட டிடிவி தினகரனின் நியமனம் எப்படி செல்லுபடியாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
 
தேர்தல் ஆணையம் அளித்த பதிலின்படி அதிமுக பொதுச்செயலாளர் பதவி தற்போது காலியாக உள்ளது. அதன்படி இதற்கு முன்னர் பொதுச்செயலாளராக ஜெயலலிதா பிறப்பித்த உத்தரவுகள் வரை மட்டுமே செல்லுபடியாகும். அவர் மறைந்த பின்னர் சசிகலா பிறப்பித்த உத்தரவுகள் செல்லுபடியாகாது.
 
ஜெயலலிதா ஏற்கனவே தினகரனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியிருப்பதால் அவர் தற்போது அதிமுகவின் அடிப்படை உறுப்பினரே கிடையாது என கூறப்படுகிறது. இந்நிலையில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நுழைய தினகரனுக்கு எந்த உரிமையும் இல்லை என கூறப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் இந்த தகவல் தினகரனுக்கு தற்போது பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.