வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 19 நவம்பர் 2018 (16:33 IST)

புயல் பாதித்த பகுதியில் மின் கட்டணம்: மின்வாரியம் முக்கிய அறிவிப்பு

சமீபத்தில் கஜா புயல் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை கதிகலங்க செய்துவிட்ட நிலையில் அந்த பகுதி மக்கள் தங்களுடைய வாழ்வாதாரங்களை இழந்து சொந்த ஊரிலேயே அத்தியாவசிய தேவைக்கு கையேந்தும் நிலையில் அகதிகள் போல் உள்ளனர்.

புயல் பாதித்த மக்களுக்கு தமிழகமெங்கிலும் இருந்து உதவிகள் குவிந்து வந்தாலும் இன்னும் அந்த பகுதிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை. ஏராளமான மின் கம்பங்கள் சேதமடைந்துவிட்டதால் மின்வாரிய ஊழியர்கள் இரவுபகலாக அதனை சரிசெய்யும் பணியில் இருப்பதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் டெல்டா பகுதிகள் அனைத்துக்கும் மின் இணைப்பு கிடைத்துவிடும் என்றும் மின்வாரியம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில்  கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், மின் கட்டணம் செலுத்த நவம்பர் 30ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, சிவகங்கை மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் நவம்பர் 15-ஆம் தேதியில் இருந்து 25-ஆம் தேதி வரையிலான இடைவெளியில் மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலையில் தற்போது 30ஆம் தேதி வரை அபராதம் இன்றி கட்டணம் செலுத்தலாம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.