வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 26 பிப்ரவரி 2019 (09:46 IST)

காங்கிரஸின் 10 தொகுதி 8 ஆகிறதா ? – தேமுதிக வரவால் புதுப் பிரச்சனை !

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸுக்கு 10 தொகுதிகளை திமுக ஒதுக்கியிருந்தது. இப்போது ஒருவேளை தேமுதிக கூட்டணிக்குள் வரும் பட்சத்தில் காங்கிரஸின் தொகுதிகள் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேமுதிகவை அதிமுக கூட்டணிக்குள் இழுக்க ஆரம்பம் முதலே பாஜக ஆர்வம் காட்டியது. தேமுதிக அதிமுகவோடு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டது. ஆனால் தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட தொகுதிகளை கொடுக்க அதிமுக மறுத்து வருகிறது. பாஜக வும் இந்த விஷயத்தில் தலையிடாமல் தேமுதிகவை டீலில் விட்டது. பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளை விடக் கம்மியாக வாங்க தேமுதிக தயக்கம் காட்டி வருகிறது. இதனால் இருக் கட்சிகளுக்கு இடையிலான கூட்டணிப் பேச்சுவார்த்தை அந்தரத்தில் தொங்குகிறது.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறது திமுக. பாமகவை கூட்டணிக்குள் கொண்டுவர முடியாததால் தேமுதிகவையாவது திமுக கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டும் என திமுக இரண்டாம் மட்டத்தில் இருந்து அழுத்தம் அதிகரித்துள்ளதாக தெரிகிறது. அதனால்தான் காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் ஸ்டாலின் ஆகியோர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சென்று சந்தித்துள்ளனர். இதனையடுத்து தேமுதிக திமுக கூட்டணிப் பக்கம் சாய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகி உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த சந்திப்புகளில் அரசியல் பேசப்பட்டது உண்மைதான் என விஜயகாந்தின் மனைவி பிரேமலதா தெரிவித்துள்ளார்.

அதிமுக வைப் பொறுத்தவரை ஏற்கனவே 12 தொகுதிகளைப் பாமக மற்றும் பாஜகவிற்கு ஒதுக்கி விட்டது. அதனால் மேற்கொண்டு 7 தொகுதிகளை தேமுதிகவிற்கு ஒதுக்கினால் கட்சியில் உள்ள வேட்பாளர்களைப் பகைத்துக்கொள்ள வேண்டியிருக்கும் என அஞ்சுகிறது. தற்போது 37 எம்.பி.களைக் கையில் வைத்திருக்கும் அதிமுக அதில் பாதி தொகுதிகளில் மட்டும் போட்டியிடும் சூழல் உருவாகும் என அஞ்சுகிறது. எனவே தேமுதிக வை இழக்க தயாராகி விட்டது. இது சம்மந்தமாக பேசிய அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் ‘ தேமுதிக எங்கள் கூட்டணிக்கு வந்தால் மகிழ்ச்சி, வராவிட்டால் வருத்தம் இல்லை’ எனப் பேசியுள்ளார்.

இதனால் திமுக பக்கம் செல்வதே சரியான முடிவாக இருக்கும் என நினைக்கும் தேமுதிக திமுக கூறியுள்ள 5 தொகுதிகளுக்கு ஒத்துக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக தேமுதிக உடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கும் போது முதலில் 3 தொகுதிகளே மனதில் வைத்திருந்தது. அதன் பின்னர் 5 தொகுதிகளுக்கு இறங்கி வந்திருக்கிறது. இதற்காக காங்கிரஸுக்கு ஒதுக்கிய 10 தொகுதிகளில் இருந்து 2 தொகுதிகளை தேமுதிக விற்குக் கொடுக்க முடிவெடுத்துள்ளது. இதற்காகக் காங்கிரஸிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

தேமுதிக உடனான கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டிற்குப் பிறகே தங்கள் கூட்டணியில் உள்ள மற்றக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடுகளை அறிவிக்க இருக்கிறதாம் திமுக.