காஞ்சிபுரத்தில் இன்று திமுக பவள விழா பொதுக்கூட்டம்!
சென்னை,
திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் திமுக பவள விழா பொதுக்கூட்டம், காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி வளாகத்தில் திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தலைமையில் மாவட்ட செயலாளரான அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
இந்த பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படை தலைவரான நடிகர் கருணாஸ் ஆகிய கூட்டணி கட்சி தலைவர்கள் வாழ்த்துரை வழங்கி பேசுகிறார்கள்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்-அமைச்சராக்க வேண்டும் என்ற திமுகவினர் விருப்பத்தை நிறைவேற்றும் முக்கிய அறிவிப்பை, இந்த பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த பொதுக்கூட்டம் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுகவின் இந்த வலுவான கூட்டணி தொடர வேண்டும் என்பதற்கான கால்கோள் விழாவாகவும் பார்க்கப்படுகிறது. எனவே திமுக பவள விழா பொதுக்கூட்டம் திமுகவினர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரத்தில் இன்று நடைபெற உள்ள தி.மு.க. பவள விழா பொதுக்கூட்டத்துக்கு அணி அணியாக திரண்டு வாருங்கள் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன், அழைப்பு விடுத்துள்ளார்.