புதன், 18 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : புதன், 18 டிசம்பர் 2024 (11:29 IST)

கட்சி தொடங்கிட்டு.. தனி விமானத்துல நடிகை கூட சுத்திக்கிட்டு..! - விஜய்யை விமர்சித்த லியோனி!?

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவில் பேசிய திமுக கொள்கை பரப்புச் செயலாளர் லியோனி, நடிகர் விஜய்யை பெயர் குறிப்பிடாமல் விமர்சித்துள்ளார்.

 

 

திமுக இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டிய சிறப்பு கூட்டங்கள் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருகின்றன. அவ்வாறாக திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் திண்டுக்கல் லியோனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

அப்போது பேசிய திண்டுக்கல் லியோனி “தற்போதைய காலத்தில் இளைஞர்களை ஒன்றிணைப்பது பெரும் சாவாலான காரியமாக உள்ளது. அவர்களை அரசியல்படுத்தி சமூக விஷயங்களை அவர்கள் சிந்திக்க செய்ய வேண்டியுள்ளது. அப்படியாக அவர்களை சிறப்பாக வழிநடத்தி செல்பவராக உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார்.
 

 

சமீபத்தில் கட்சி ஆரம்பித்த அந்த நடிகர் பேசும்போது மற்றவர்கள் போல வரலாறு, புள்ளி விவரம் பேசிக் கொண்டிருக்க மாட்டேன் என பேசினார். மக்களை புரிந்து கொள்ள வரலாறை தெரிந்து கொள்ள வேண்டும். மக்களோடு நிற்காமல் கோவாவில் நடிகை திருமணத்திற்கு சென்று போஸ் கொடுப்பதுமாக, தனி விமானத்தில் நடிகையோடு சென்று போட்டோ எடுப்பதுமாக இருப்பவர்கள், இருக்கும் இடம் தெரியாமல் போய் விடுவார்கள்.

 

நாடாளுமன்றத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பெரும் விவாதம் நடந்து வருகிறது. அதுகுறித்து அந்த நடிகர் பேசினாரா? அதானி விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினாரா? இதையெல்லாம் செய்ய வேண்டும்” என்று பேசியுள்ளார். பெயர் குறிப்பிடாமல் பேசினாலும் அவர் முழுவதும் விஜய்யை குறிப்பிட்டே பேசுகிறார் என தெரியும்படி பேசியுள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு எழுந்துள்ளது.

 

Edit by Prasanth.K