திங்கள், 13 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : செவ்வாய், 25 ஏப்ரல் 2017 (09:28 IST)

தினகரன் பிடி இறுகுகிறது: சுகேஷுடன் பேசிய வாட்ஸ் ஆப் உரையாடல் சிக்கியது!

தினகரன் பிடி இறுகுகிறது: சுகேஷுடன் பேசிய வாட்ஸ் ஆப் உரையாடல் சிக்கியது!

இந்திய தேர்தல் ஆணையத்துக்கு இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் டெல்லி போலீஸின் விசாரணைக்கு ஆஜராகியுள்ள தினகரனுக்கு எதிராக மேலும் ஓர் ஆதாரம் சிக்கியுள்ளதாகவும், இதனால் தினகரன் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் மேலும் அதிகமாகியுள்ளதாக கூறப்படுகிறது.


 


டெல்லியில் சுகேஷ் சந்திரசேகரராவ் என்ற இடைத்தரகரை 1.30 கோடி ரூபாய் ரொக்கப்பணத்துடன் டெல்லி லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் தினகரன் இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க 60 கோடி ரூபாய் வர பேரம் பேசியது தெரியவந்தது.

இதனையடுத்து தினகரனை டெல்லி போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த மூன்று நாட்களாக தினகரனிடம் விசாரணை நடக்கிறது. இதில் முதல் இரண்டு நாட்கள் தினகரன் சுகேஷ் என்பவரை தெரியாது என்பது போலவே ஒரே வார்த்தை பதில் அளித்து வந்ததாகவும், விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்ற தகவலும் வந்தது.

இந்நிலையில் நேற்று ஆஜரான தினகரன் சுகேஷ் உடன் பேசியதை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் தினகரன், சுகேஷ் பேசிய தொலைப்பேசி உரையாடல் மட்டுமல்லாமல் இருவரும் பேசிய வாட்ஸ் அப் உரையாடலையும் போலீசார் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தினகரன் கைது செய்யப்படுவதற்கான பிடி இறுகுவதாகவே தகவல்கள் வருகின்றன. சுகேஷ் தன்னிடம் நீதிபதி எனக்கூறி அறிமுகமானதாக தினகரன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.