புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 25 அக்டோபர் 2018 (12:17 IST)

தீர்ப்பு சாதகமாக வந்தாலும் எடப்பாடி ஆட்சிக்கு சிக்கல்தான் - ஏன் தெரியுமா?

18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகரின் முடிவு செல்லும் என மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் தீர்ப்பளித்துள்ளார்.

 
இந்த வழக்கில் தினகரன் தரப்பிற்கு சாதகமாக தீர்ப்பு வெளியானால், ஆட்சிக்கு பெரும் சிக்கல் ஏற்படும் என்பதால், எடப்பாடி பழனிச்சாமி தரப்பு பீதியிலேயே இருந்து வந்தது. ஆனால், தற்போது தீர்ப்பு அவர்களுக்கு சாதகமாகவே வந்துவிட்டதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
தற்போது தினகரன் தரப்பினருக்கு 2 வாய்ப்புகள்தான் இருக்கிறது. ஒன்று உச்ச நீதிமன்றத்தை நாடுவது அல்லது இடைத்தேர்தலை சந்திப்பது. ஆனால், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தீர்ப்பு வழங்க சில மாதங்கள் ஆகலாம். ஏற்கனவே, பல மாதங்கள் எம்.எல்.ஏ பதவியை இழந்து நிற்கும் 18 எம்.எல்.ஏக்கள், இன்னும் பல மாதங்கள் பதவியில்லாமல் இருக்க வேண்டி வரும். அதோடு, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை பிரபலித்துவிட்டால் அனைத்து முயற்சிகளும் வீணாகி விடும். எனவே, இடைத்தேர்தலை சந்திப்பதே நல்லது என்கிற முடிவையே தினகரன் தரப்பு எடுக்க வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது. 
 
இதில் அவர்களுக்கு லாபமும் இருக்கிறது. அதாவது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தோடு போட்டியிட்டும் அதிமுக வேட்பாளர் தோல்வியை தழுவினார். குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட தினகரன் வெற்றி பெற்றார்.

 
தற்போது திருவாரூர், திருப்பரங்குன்றம் மற்றும் 18 தொகுதிகள் சேர்த்து மொத்தம் 20 தொகுதிகள் காலியாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இப்போது மக்கள் உள்ள மனநிலையில், அந்த தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் அல்லது தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களே வெற்றி பெற வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.
 
அப்படி, இடைத்தேர்தல்களில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீண்டும் வெற்றி பெற்றுவிட்டால் அவர்கள் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராகவே செயல்படுவார்கள். அல்லது திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றாலும் திமுகவின் பலம் அதிகரிக்கும். இதனால், எடப்பாடி தலைமையிலான ஆட்சி பெரும்பான்மை இழக்க வாய்ப்புள்ளது. இது ஆளும் அதிமுக அரசுக்கு மீண்டும் சிக்கலையே ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
 
எனவே, தற்காலிகமாக வந்துள்ள இந்த தீர்ப்பால் தற்போதைக்கு ஆபத்து இல்லையே தவிர, இது நிரந்தரம் அல்ல எனவும், இடைதேர்தல் முடிவுக்கு பின் அனைத்தும் மாறும் எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.