மீண்டும் பார்க்கிங் களமாக மாறிய வேளச்சேரி மேம்பாலம்.. சென்னை மக்கள் மீண்டும் உஷார்..!
வங்க கடலில் தோன்றிய ஃபெஞ்சல் புயல் இன்று மதியம் மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
மணிக்கு ஏழு கிலோமீட்டர் வேகத்தில் மெதுவாக ஃபெஞ்சல் புயல் நகர்ந்து வருவதால், கரையை கடக்க தாமதமாகும் என்றும் இதனால் காலை 10 மணி முதல் மழையின் தீவிரம் அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், கனமழை காரணமாக மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் தங்களுடைய கார்களை வேளச்சேரி மேம்பாலத்தில் பார்க் செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. எனவே, வேளச்சேரி மேம்பாலம் மீண்டும் பார்க்கிங் களமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சென்னை முழுவதும் தேங்கி இருக்கும் மழை நீரை ராட்சத மோட்டார்கள் மூலம் உடனுக்குடன் மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
இன்று காலை 10 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Edited by Mahendran