வங்க கடலில் உருவாக உள்ள ஃபெங்கல் புயல் கரையை கடக்கும் முன்னரே வலுவிழக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நாகை அருகே கடல்பகுதியில் மையம் கொண்டுள்ளது. இது புயலாக வலுவடைய உள்ள நிலையில் புயலுக்கு ஃபெங்கல் என பெயரிடப்பட உள்ளது. இதன் காரணமாக நேற்று முதலாகவே தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.
இன்றும் 25க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மழை தொடர்ந்து வரும் நிலையில், டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்னும் சில மணி நேரங்களில் புயல் சின்னம் உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் புயல் எங்கு கரையை கடக்கும்? எவ்வளவு பாதிப்புகள் உண்டாகும்? என மக்கள் பீதியில் உள்ளனர்.
இந்நிலையில் இந்த ஃபெங்கல் புயல் கரையை கடக்கும் முன்னரே வலுவிழப்பதற்கான சாத்தியங்கள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கரையை நெருங்கும் முன்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்து கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் குறைவான சூறைக்காற்றும், அதிக மழையும் இருக்கும் என்றாலும், புயல் அளவிற்கு சேதங்கள் அதிகம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
Edit by Prasanth.K