சிறையில் பிரியாணி சமைத்த கைதிகள்– வைரலாகும் வீடியோ
சென்னைப் புழல் சிறையில் தண்டனைக் கைதிகள் பிரியாணி சமைக்கும் வீடியோ ஒன்று வெளியாகி வேகமாக பரவிவருகிறது.
சிறைகளில் அவ்வப்போது நடத்தப்படும் சோதனைகளில் பீடி, சிகரெட், கைதிகள் ஒளித்து வைத்திருக்கும் பணம் என மாட்டுவது வாடிக்கை. ஆனால் கடந்த மாதத்தில் சென்னைப் புழல் சிறையில் கைதிகள் சொகுசாக வாழ்வது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின.
அதைத்தொடர்ந்து சென்னைப் புழல் சிறையில் டிஐஜி முருகேசன் தலைமையிலான போலீஸார் நடத்திய சோதனையில் பாஸ்மதி அரிசி, எல்சிடி தொலைக்காட்சிகள், மெத்தைகள் மற்றும் கட்டில்கள் போன்ற சொகுசுப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. இந்தப் பொருட்களை எவ்வாறு சிறைக்குள் கொண்டு சென்றிருப்பார்கள் என்ற கோணத்திலும் விசாரனை நடந்துவருகிறது.
இந்நிலையில் தற்போது சிறையில் தண்டனைக் கைதிகள் பிரியாணி சமைக்கும் வீடியோ ஒன்று வெளியாகி மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது. இது பழைய வீடியோவா அல்லது இப்போது புதிதாக எடுக்கப்பட்ட வீடியோவா என்ற விவரம் தெரியவில்லை.
சிறைகளில் சிசிடிவி கேமரா, ஜாமர் போன்ற நவீனத் தொழில்நுட்பக் கருவிகள் பொருத்தப்பட்டு இருக்கும்போதே இது போன்ற குற்றங்கள் நடப்பது காவல்துறை அதிகாரிகள் மீதே சந்தேகத்தை வரவைக்கின்றன. குற்றங்களில் ஈடுபட்டு மனம் திருந்துவதற்காக சிறைக்கும் செல்லும் குற்றவாளிகள் அங்குள்ள காவல் அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொண்டு இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவது சிறைத்துறை மீது மக்களுக்கு அதிருப்தியையே ஏற்படுத்துகிறது.