மனுசன் சாப்பிடுவானா இத.. குப்பை வண்டியில் சாப்பாடு! – கொரோனா நோயாளிகள் போராட்டம்!
ஈரோடு மாவட்டம் அருகே கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டுள்ள பள்ளிக்கு குப்பை வண்டியில் உணவு கொண்டு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்நிலையில் கொரோனா பாதித்தவர்கள், நோய் தொற்று உள்ளவர்கள் பல்வேறு இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். செம்புளிச்சாம் பாளையம் அருகே உள்ள தனியார் பள்ளியில் கொரோனா தொற்று உள்ளதாக 51 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
ஆனால் அந்த பள்ளியில் குடிநீர் வசதி இல்லை, கழிவறையில் தண்ணீர் வருவதில்லை, குப்பைகள் சுத்தம் செய்யப்படுவதில்லை என தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்துள்ளன. இந்நிலையில் அங்குள்ள நோயாளிகளுக்கு குப்பை வண்டியில் உணவு கொண்டு வந்து கொடுத்தது அவர்களை கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள் பள்ளி வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையறிந்து அங்கு விரைந்த பவானி தாசில்தார் அவர்களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தி தருவதாக கூறியதால் போராட்டம் கைவிடப்பட்டது. கொரோனா நோயாளிகளுக்கு குப்பை வண்டியில் உணவு கொண்டு வந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.