திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணை இன்று மீண்டும் தனி நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் அமர்வில் தொடங்கியது. இதில், உயர் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த மனுதாரர் தரப்பினர், ஒரு விவகாரத்தில் நீதிமன்றம் மூன்று முறை உத்தரவு பிறப்பித்தும் அதனை அரசு நிறைவேற்றவில்லை என்று முறையீடு செய்தனர். மனுதாரரின் முறையீட்டையடுத்து, தனி நீதிபதி சுவாமிநாதன் இரண்டு முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தார். முதலாவதாக, திருப்பரங்குன்றம் பகுதிக்கு சென்று அங்குள்ள தற்போதைய சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்த விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டார். இரண்டாவதாக, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஏன் நடைமுறைப்படுத்தவில்லை என்பதற்கான காரணங்களை விளக்கி அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவுகளை பிறப்பித்ததை தொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் டிசம்பர் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ள நிலையிலும், உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு விசாரணை நீடிப்பதால், திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது Edited by Siva