யானை பசிக்கு சோளப் பொறியா? – மோடிக்கு கே.எஸ்.அழகிரி கேள்வி!
கொரோனா பாதிப்புக்கு பிரதமர் ஒதுக்கியுள்ள நிதி யானை பசிக்கு சோளப் பொறியாக உள்ளதாக கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் முழுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன.
நாட்டில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பு வசதிகளை அதிகப்படுத்தவும் பிரதமர் நரேந்திர மோடி ரூ.15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி அறிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ” உலகத்தின் வல்லரசாக இருக்கிற 35 கோடி மக்கள் தொகை கொண்ட அமெரிக்கா, கொரோனா தாக்குதலில் இருந்து தொழில் முனைவோரை பாதுகாக்க 1.5 டிரில்லியன் டாலர் ( நமது ரூபாய் மதிப்பில் 1 கோடியே 7 லட்சத்து 14 ஆயிரத்து 500 கோடி) நிதி ஒதுக்கியுள்ளது.
பிரிட்டன் 900 பில்லியன் டாலரை ஒதுக்கியுள்ளது. ஆனால், நமது பிரதமர் மோடியோ 136 கோடி மக்கள் கொண்ட நம் நாட்டிற்கு, வெறும் ரூ.15 ஆயிரம் கோடியை ஒதுக்கியிருப்பது, யானைப் பசிக்கு சோளப் பொறியாகத்தான் இருக்கும் என்பதை தெரிவிக்க விரும்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.