காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஏமாற மாட்டார்கள். திருநாவுக்கரசர்
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு எந்த நேரமும் கவிழ்ந்துவிடும் ஆபத்து இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் இப்போதைக்கு அந்த ஆட்சிக்கு ஆபத்து இல்லை என்பது நேற்றைய நீதிமன்ற உத்தரவு மூலம் உறுதியாகிவிட்டது.
மறு உத்தரவு வரும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் முதல்வர் அணி சற்று நிம்மதி அடைந்துள்ளது. ஒருவேளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை அதிமுகவுக்கு ஆதரவாக இழுக்க ரகசிய பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
ஆனால் இதை தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மறுத்துள்ளார். நேற்று மாலை தமிழக அரசியல் நிலவரம் குறித்து விவாதிப்பதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் கூடியது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த திருநாவுக்கரசர் அ.தி.மு.க. மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பல். அதில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஏறவும் மாட்டார்கள், ஏமாறவும் மாட்டார்கள் என்று கூறினார். மேலும் கூண்டோடு ராஜினாமா செய்யும் திட்டம் எதுவும் இப்போதைக்கு இல்லை என்றும் அவர் மேலும் கூறினார்.