வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 15 பிப்ரவரி 2019 (13:29 IST)

12 சீட் கேட்கும் காங்கிரஸ் ; 8 சீட் தரும் திமுக – பேச்சுவார்த்தையில் இழுபறி ?

திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் காங்கிரஸ் கூட்டணியில் தங்களுக்கு வேண்டிய சீட்கள் மற்றும் தொகுதிகளின் எண்ணிக்கைக் குறித்து இறுதிகட்ட பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டு வருகிறது.

மக்களவைத் தேர்தல் தேதி எந்நேரமும் அறிவிக்கப்படலாம் என்ற சூழ்நிலை நாடு முழுவதும் நிலவி வருகிறது. தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் தங்கள் கூட்டணிகளை உறுதி செய்து தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளோடு ஆலோசித்து வருகின்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக தனது கூட்டணியை உறுதி செய்துள்ளது. அதிமுக இன்னும் பேச்சுவார்த்தை நிலையிலேயே உள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை.

திமுக தனது கூட்டணியில் உள்ளக் காங்கிரஸ் கட்சியோடு கடந்த சில நாட்களாகக் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. காங்கிரஸ் கடந்த முறை மக்களனைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்தபோது பெற்ற சீட்களின் எண்ணிக்கை 16. 2009 ஈழப்போர் உச்சக்கட்டத்தில் இருந்து  காங்கிரஸ் மீது வெறுப்பு தமிழகமெங்கும் நிலவிய நேரம். ஆனால் அப்போதே திமுக காங்கிரஸுக்கு 16 சீட்டுகள் கொடுத்தது. அதில் காங்கிரஸும் 8 இடங்களில் வென்றது.

அப்போதைய நிலைமையை ஒப்பிட இப்போது காங்கிரஸுக்கு அதிகளவில் எதிர்ப்புத் தமிழகத்தில் இல்லை. ஆனால் திமுக மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது. அதற்குக மிக முக்கியக் காரணம் அதிமுக மற்றும் பாஜக மீதான மக்களிடையே ஏற்பட்டிருக்கும் அவநம்பிக்கையுமே. அதனால் இம்முறை 4 தொகுதிகள் குறைத்துக்கொண்டு 12 தொகுதிகள் கேட்டுள்ளது, காங்கிரஸ். ஆனால் திமுக 8 சீட்களுக்கு மேல் தரமுடியாது என கறாராக உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால் கூட்டணியை இறுதி செய்வதில் இருக் கட்சிகளுக்கும் இடையிலானக் கடைசிக் கட்டப் பேச்சுவார்த்தை முடியாமல் இன்னும் இழுபறியாகவே உள்ளது. இதனை அடுத்து திமுக மற்றும் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்த இருக்கின்றனர். அதன் பின்னரே காங்கிரஸூக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்த விவரம் வெளியாகும்.