அரசியல் கட்சித் தலைவர்கள் குறித்து பேசக்கூடாது: ரங்கராஜன் நரசிம்மனுக்கு, நிபந்தனை ஜாமீன்..!
மடாதிபதிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் குறித்து பேசக்கூடாது என்ற நிபந்தனையுடன் ரங்கராஜன் நரசிம்மனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன், ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் மீது குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். அதன் அடிப்படையில் அவர் அளித்த புகாரின் மூலம் சைபர் கிரைம் போலீசார் ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். தனிப்படை போலீசார் ஸ்ரீரங்கத்தில் ரங்கராஜனை கைது செய்தனர்.
பின்னர், அவர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனால் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், நரசிம்மனின் மகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனது தந்தையின் கைதுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணையின் போது, ரங்கராஜன் நரசிம்மன் அவதூறாக பேசிய வீடியோ நீதிமன்றத்தில் காவல்துறையால் ஒப்படைக்கப்பட்டது.
அதைப் பார்வையிட்ட நீதிபதி, மடாதிபதிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் குறித்து பேசக்கூடாது என்ற நிபந்தனை அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்கினார். மேலும், சாட்சிகளை மிரட்டக்கூடாது என்றும், சாட்சிகளை தொடர்பு கொள்ளக் கூடாது என்றும் நீதிபதி நிபந்தனைகள் விதித்து உத்தரவிட்டார்.
Edited by Siva