காதலித்த பெண்ணுக்கு கத்திக்குத்து..! – காதலன் சொன்ன காரணம்?
வேலூர் மாவட்டத்தில் காதல் விவகாரத்தில் காதலியை காதலனே கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் திருவலம் அருகே உள்ள குப்பத்தாமோட்டூர் பகுதியை சேர்ந்தவர் 20வயதான சதீஷ்குமார். இவரும் அதே பகுதியை சேர்ந்த 18வயது கல்லூரி மாணவியும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று திருவலம் பேருந்து நிலையத்தில் மாணவி பேருந்துக்காக காத்திருந்துள்ளார். அப்போது அங்கு வந்த சதீஷ்குமார் மாணவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த சதீஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியின் கழுத்தி குத்தியுள்ளார்.
இதனால் மாணவி ரத்த வெள்ளத்தில் சரிந்த நிலையில் சதீஷ்குமார் தப்பி ஓட முயன்றுள்ளார். ஆனால் அவரை பிடித்த பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனை அனுப்பப்பட்ட மாணவி அங்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
போலீஸ் விசாரணையில் கொலை முயற்சிக்கான காரணம் குறித்து பேசிய சதீஷ்குமார், தானும் அந்த பெண்ணும் பல நாட்களாக காதலித்து வந்ததாகவும், ஆனால் சமீப காலமாக அந்த பெண் தன்னிடம் பேசுவதை நிறுத்தி விட்டதாகவும், வேறு ஒரு நபருடன் அடிக்கடி பேசி வந்ததாகவும், அதனால் அவர் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் ஆத்திரமடைந்து மாணவியை குத்தியதாகவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.