வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 12 ஜூலை 2021 (12:34 IST)

உயிருக்கு போராடும் சிறுமி; திரண்ட நிதி! - வரியை குறைக்குமா மத்திய அரசு?

நாமக்கல் சிறுமியின் சிகிச்சைக்கு ரூ.16 கோடி நிதி கிடைத்தும் மத்திய அரசு மருந்துக்கான வரியை நீக்காததால் குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் வசித்து வரும் சதீஷ் – பிரியதர்ஷினி ஆகியோரின் மகள் இரண்டு வயதான மித்ரா. சமீபத்தில் மித்ராவை உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதித்தபோது குழந்தைக்கு தண்டுவட சிதைவு நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கான தடுப்பு மருந்து ஸ்விட்சர்லாந்தில் தயாரிக்கப்படுகிறது. அதை வாங்க ரூ.16 கோடி தேவைப்படும் என்ற நிலையில் சமூக வலைதளங்கள் மூலமாக நிதி அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. பலர் தாராளமாக நிதி அளித்ததின் பேரில் குழந்தைக்கு மருந்து வாங்குவதற்கான பணம் கிடைத்துள்ளது. ஆனால் மருந்தை இந்தியாவிற்குள் கொண்டு வர ரூ.6 கோடி இறக்குமதி வரி உள்ளதால் மருந்தை வாங்குவதில் சிக்கல் உள்ளது.

இன்னும் 10 நாட்களுக்குள் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய தேவை உள்ள நிலையில் உடனடியாக இறக்குமதி வரியை ரத்து செய்ய பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. எனினும் இதுவரை மத்திய அரசிடமிருந்து எந்த பதிலும் வராததால் விரைவில் நடவடிக்கை எடுக்க பொதுநல ஆர்வலர்களும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.