1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 1 மே 2024 (14:24 IST)

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

Stalin
ஏற்காடு பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 
 
சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் தனியார் பஸ் சுமார் 80 அடி பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியானார்கள். 63 பேர் படுகாயம் அடைந்தனர்.  இந்த நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 
 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் நேற்று மாலை தனியார் பஸ் விபத்துக்குள்ளாகி 5 பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் துயரத்துக்குள்ளானேன் என்று தெரிவித்துள்ளார்.
 
விபத்து குறித்த தகவல் நேற்று கிடைத்ததும், உடனடியாக மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தியதோடு, காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து உரிய உயிர்காப்பு சிகிச்சைகளும் அளிக்கப்படுவதை உறுதிசெய்யவும் உத்தரவிட்டிருக்கிறேன் என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
 
இவ்விபத்தில் உற்றாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.