நெட் வசதி இல்லைனா தேர்வை எழுதி கூரியர்ல அனுப்புங்க! – சென்னை பல்கலைகழகம்
தமிழக பல்கலைகழகங்களில் இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்த ஏற்பாடாகி வரும் நிலையில் இணைய வசதி இல்லாத மாணவர்களுக்கு சென்னை பல்கலைகழகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கொரோனா காரணமாக தமிழக பல்கலைகழகங்களில் தேர்வுகள் நடைபெறாமல் இருந்த நிலையில் இறுதி ஆண்டு தேர்வுகளுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழக பல்கலைகழகங்கள் சில ஆன்லைன் மூலமாகவும், சில நேரடியாகவும் தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளன. சென்னை பல்கலைகழகம் ஆன்லைன் மூலமாக தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் மாணவர்கள் பலருக்கு ஆன்லைன் தேர்வு எழுத தேவையான இணைய வசதி உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகள் இல்லாததாக புகார் எழுந்தது. இதுகுறித்து புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள சென்னை பல்கலைகழகம் “இணைய வசதியில்லாத மாணவர்கள் செமஸ்டர் தேர்வுகளை வீட்டில் இருந்தபடியே எழுதி ஸ்பீட் போஸ்ட் மூலமாக சென்னை பல்கலைகழகத்திற்கு அனுப்பி வைக்கலாம்” என்று கூறியுள்ளது.