வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வியாழன், 1 ஜூன் 2017 (12:52 IST)

சென்னை சில்க்ஸ் கட்டிடம் இடிக்கப்படுகிறது ; 3 நாட்களில் தரை மட்டம்

சென்னை தி நகரில் தீ விபத்து ஏற்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்கப்படும் பணி இன்று மாலை துவங்கவுள்ளது.
 

 
சென்னை தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் நேற்று காலை 4 மணியளிவில் தீ பற்றியது. முதலில் அடித்தளத்தில் பற்றிய தீ, படிப்படியாக மற்ற 6 தளங்களுக்கும் பரவியது. ஒரே புகை மூட்டமாக இருந்ததால், தீயணைப்பு வீரர்களால் உள்ளே சென்று தீயை அணைக்க முடியவில்லை. எனவே, ரசாயணப் பவுடர் மூலம் தீயை அணைக்க முயன்றனர். அதில் சற்று தீயின் தாக்கம் குறைந்தாலும், கடையின் உள்ளே ஏராளமான துணிகள் அனைத்தும் எரிய தொடங்கியதால், தீ மேலும் பரவி, கொளுந்து விட்டு எரிகிறது. 
 
தீயை அணைப்பதற்கு இதுவரை 60 லாரி தண்ணீரை தீயணைப்பு வீரர்கள் பயன்படுத்தினர். இந்த தீ விபத்தின் காரணமாக, இந்த பகுதி முழுவதும் அபாயகரமான பகுதியாக அறிவிக்கப்பட்டது. அருகிலிருப்பவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 
 
மேலும், அந்த கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து 2வது நாளாக இன்றும் எரிய தொடங்கியது. 90 சதவிகித தீ அணைக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில்,  இன்று அதிகாலை 3.30 மணியளவில் 7வது மாடி முதல் 2வது மாடி வரை கட்டிடம் இடிந்து விழுந்தது. 
 
எனவே, இன்று காலை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கட்டிடத்தை ஆய்வு செய்தார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “சென்னை சில்க்ஸ் கட்டிடம் தனது ஸ்திரத்தன்மையை இழந்து விட்டதால், அதை இடிக்க முடிவு செய்துள்ளோம். இன்று மாலை அதன் பணி தொடங்குகிறது. இயந்திரம், ஆட்களைக்கொண்டு கட்டிடம் இடிக்கப்படும். இன்னும் 3 நாட்களுக்குள் கட்டிடம் தரை மட்டமாக்கப்படும். மேலும், அதற்கான செலவுகள் அனைத்தையும் கட்டிட உரிமையாளரிடமே பெறப்படும்” என அவர் தெரிவித்தார்.