வெள்ளி, 1 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 14 செப்டம்பர் 2016 (18:41 IST)

எச்சில் இலையில் புரண்டு அங்கப்பிரதட்சணம்; தடை விதிக்க நீதிமன்றத்தில் மனு

எச்சில் இலையில் புரண்டு அங்கப்பிரதட்சணம்; தடை விதிக்க நீதிமன்றத்தில் மனு

கரூரை அடுத்த நெரூரில் உள்ள புகழ்பெற்ற சதாசி்வ பிரம்மேந்திராள் கோவிலில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில், நடந்து வரும் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் எச்சில் இலையில் புரண்டு அங்கப்பிரதட்சணம் செய்கின்றனர். 


 

 
இதேபோல், தென் கர்நாடக பகுதியில் உள்ள குக்கே சுப்பிரமண்யா ஆலயத்திலும் எச்சி்ல் இலையில் புரளும் அங்கப்பிரதட்சணம் பல நூறாண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த விழாக்களில் பாகுபாடு காட்டப்படுவதாகவும், குறி்ப்பிட்ட பிரிவினர் சாப்பிட்ட இ்லைகளில், மற்றவர்கள் புரண்டு அங்கப்பிரதட்சணம் செய்வது சமத்துவத்துக்கு எதிரானது என்றும், பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டன. 
 
இது தொடர்பான உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கி்ல், இந்த நடைமுறைக்குத் தடை விதிக்க வேண்டும் என மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. 


 

 
பிள்ளைப் பேறு, தோல் வியாதிகள், மற்றும் குடும்பச் சிக்கல்களுக்கு நிவர்த்தி கிடைக்கும் என்ற நம்பிக்கையில், பக்தர்கள் எச்சில் இலையில் புரண்டு அங்கப்பிரதட்சணம் செய்து வருகின்றனர். தமிழக அரசு தனது வாதத்தில், கோவில் நிர்வாகத்தின் சார்பின் ஆண்டுதோறும் நடைபெறும் ஆராதனை விழாவுக்கும், இந்ந நடைமுறைக்கும் தொடர்பில்லை என்று தெரிவித்துள்ளது. 
 
ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திர சபை எனும் பக்தர்கள் அமைப்பு இந்த விழாவை நடத்துவதாகவும், நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர், இதில் பங்கேற்பதாகவும் கூறியுள்ளது. சாதி வேறுபாடின்றி அனைவரும் வாழை இலையில் உணவருந்துவதாகவும், பின்னர், சாதி, மத, மொழி, மற்றும் வர்க்க வேறுபாடு இன்றி அனைவரும் எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்வதாகவும், தமிழக அரசு கூறியுள்ளது. 


 

 
மற்ற சமூகத்தினரோடு பிராமணர்களும், தலித்துகளும் சாதி வேறுபாடு இன்றி, இதில் பங்கேற்பதாகவும், இலைகளை அகற்றுவதிலும் எந்த வித சாதிப் பாகுபாடும் காட்டப்படுவதில்லை என்றும், விவரித்துள்ளது. மேலும், பக்தர்கள் தங்களி்ன் விருப்பத்தின் பேரிலேயே நேர்த்திக்கடன் செலுத்துவதாகவும், எவரும் வற்புறுத்தப்படுவதில்லை எனவும், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 
 
ஆனால், தமிழக அரசின் வாதங்களை ஏற்க மறுத்த மத்திய அரசு இந்த அங்கப்பிரதட்சண நடைமுறை மனித கண்ணியத்திற்கு எதிரானது என்று கூறியுள்ளது. எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்தால், தோல் நோய்கள் குணமாகும் என்பதும், தீய சக்திகளின் துன்பங்களிலிருந்து காத்துக் கொள்ள முடியும் என்று கருதுவதும், அறிவியலுக்கு எதிரானது, உடல்நலனுக்குத் தீங்கானது, அறிவுக்குப் புறம்பானது என்று மத்திய அரசு தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது. 
 
தமது விருப்பத்தின் பேரிலேயே ஒருவர் எச்சில் இலை அங்கப்பிரதட்சணம் செய்தாலும், அதை அனுமதிப்பது அரசியல் சட்டம் வலியுறுத்தும் சமத்துவம், நீதி, மனித மாண்பு ஆகிய விழுமியங்களுக்கு எதிரானது என்று, மத்திய அரசின் சமூக நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
 
மேலும், அரசியலமைப்புச் சட்டத்தின் 25 ஆவது பிரிவு வழங்கும் மதச் சுதந்திரத்தில் பிறர் தலையிடக்கூடாது என்ற வாதம், இந்த வழக்கில் பொருந்தாது என்று குறிப்பிட்டுள்ள மத்திய அரசு, மனித உரிமைகளுக்கு எதிரான இதுபோன்ற நடைமுறைகள் ஊக்குவிக்கப்படக் கூடாது என்றும், தடை செய்யப் படவேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தை வலியுறுத்தியுள்ளது. 
 
எச்சில் இலையில் புரளும் அங்கப்பிரதட்சண நடைமுறைக்கு ஆதரவாக மாநில அரசுகள் வாதிட்டு வரும் நிலையில், தடைசெய்யக் கோரும் மனுதாரருக்கு ஆதரவான நிலையை மத்திய அரசு எடுத்துள்ளது இந்த வழக்கில் முக்கிய திருப்பமாகக் கருதப்படுகிறது.