திங்கள், 13 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 12 ஜனவரி 2017 (16:33 IST)

’மிரட்டி பணிய வைக்க முடியாது’ - ஜெ.வின் அண்ணன் மகள் தீபா அதிரடி

என்னை சந்திக்க வரும் தொண்டர்களை சிலர் மிரட்டுவதாக தெரியவந்துள்ளது. யாரையும் மிரட்டி, அவர்களுக்கு பணிய வைக்க முடியாது என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார்.


 

தமிழக முன்னாள் முதலமைச்சரும், அஇஅதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ஆம் தேதி மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இதனையடுத்து, முதலமைச்சர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டனர்.

ஆனால், கட்சியின் பொதுச்செயலாளர் யார் என்று அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு நிலவிய நிலையில் டிசம்பர் 31ஆம் தேதி ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியும், 25 ஆண்டு காலமாக அரசியல் ஆலோசகருமாக இருந்துவந்த சசிகலாதான் பதவியேற்றுக் கொண்டார்.

இதற்கிடையில், சசிகலா தலைமைப் பதவிக்கு எதிர்க்கும் சில அதிமுக நிர்வாகிகள், ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயராமின் மகளான தீபா தலைமைப் பதவிக்கு வரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயராமின் மகளான தீபா, ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்தே தன்னை உள்ளே சென்று பார்ப்பதற்கு அனுமதி மறுக்கிறார்கள் என்று சசிகலாவிற்கு எதிரான புகாரை தெரிவித்தார். மேலும், தன் அத்தை சாவில் மர்மம் இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், அதிமுக தொண்டர்கள் தினமும் தீபாவின் வீட்டிற்கு அவரை பார்ப்பதற்காக வருகின்றனர். அவர்களிடம் தீபா, அரசியலில் ஈடுபடுவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடுவேன் என்று கூறியிருந்தார்.

இதற்கிடையில் சேலம், திருச்சி, கரூர், ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், சேலம், தஞ்சாவூர் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தீபா பேரவை ஆரம்பித்து, உறுப்பினர் சேர்க்கையையும், அதிமுகவினர் துவங்கி விட்டனர்.

சேலத்தில், எம்ஜிஆர், ஜெயலலிதா அதிமுக என்ற பெயரில் புதிய இயக்கத்தையும் ஆரம்பித்து கொடி, சின்னம் ஆகியவற்றையும் அறிவித்து விட்டனர். இந்த இயக்கம் தீபா தலைமை தாங்கி நடத்துவதற்காக துவங்கப்பட்ட இயக்கம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தீபா குறித்த அவதூறுகளை அதிமுக வட்டாரங்கள் பரப்பி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும், தீபா கிறிஸ்தவ மதத்துக்கு மாறி விட்டதாகவும், கர்ப்பமாக இருப்பதாகவும் செய்திகளை பரப்பி வருகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடத்தில் பேசிய தீபா, நான் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுகிறேன்; கிறிஸ்தவராக மாறி விட்டேன் என, இப்போது சொல்லவில்லை. என் அத்தை ஜெயலலிதா இறந்த சில நாட்களில், நான், அவர் மரணத்தில் ஒளிந்து கிடக்கும் மர்மம் விலக வேண்டும் என சொல்ல ஆரம்பித்த, சில நாட்களிலேயே இப்படி, செய்தி பரப்ப துவங்கி விட்டார்கள்.

அப்போதே நான் சொன்னேன். நான், எல்லா மத பண்டிகைகளுக்கும், அந்த மதத்தை சார்ந்தவர்களுக்கு வாழ்த்து சொல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். ரம்ஜான் நாளில், முஸ்லிம்களுக்கு வாழ்த்துச் சொன்னேன். உடனே, நான் முஸ்லிம் மதத்துக்கு மாறி விட்டேன் என சொல்ல முடியுமா?

அரசியல் ரீதியில், நான், பலம் பெற்று விடுவேன் என்ற அச்சத்தில், சிலர் இப்படியெல்லாம் செய்தி பரப்புகின்றனர். அதில் கவனம் செலுத்தி, நேரத்தை வீணடிக்க வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர். அவர்கள் விருப்பத்தை, அந்த விஷயத்திலும் நான் நிறைவேற்ற மாட்டேன்.

என்னை சந்திக்க வரும் தொண்டர்களை சிலர் மிரட்டுவதாக தெரியவந்துள்ளது. யாரையும் மிரட்டி, அவர்களுக்கு பணிய வைக்க முடியாது. நடப்பது, நல்லவிதமாக நடந்தே தீரும்” என்று தெரிவித்துள்ளார்.