புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: புதன், 29 ஜனவரி 2020 (22:06 IST)

கொரோனா வைரஸ் பரவ சீனர்களின் உணவுப் பழக்கம் காரணமா?

கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர். 4500 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனா தவிர வேறு எந்த நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவுகிறது என்பது குறித்தும், இந்த வைரஸ் பாதிப்பின் காரணம் வௌவால் இறைச்சி உள்ள சூப்தான் என்று கூறும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இவ்வாறான காணொளிகள் எங்கிருந்து பகிரப்பட்டது, ஏன் பரவுகிறது என்பது குறித்து பிபிசி மானிடரிங் குழு ஆராய்ந்தது.
 
வௌவால் சூப் காணொளிகள்
 
கொரோனா வைரஸ் உருவானதன் காரணம் குறித்து ஆரம்பத்தில் இருந்தே மக்கள் சமூக வலைத்தளங்களில் விவாதித்து வருகின்றனர். வுஹானில் வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட பிறகும் சீன மக்கள் வௌவால் இறைச்சி உட்கொள்கின்றனர் என்று கூறும் காணொளிகள் பலவும் அதிகமாக பகிரப்பட்டு வந்தன.
 
அவ்வாறு ஒரு காணொளியில் சீனப் பெண் ஒருவர் சமைத்த வௌவால் இறைச்சியை கையில் வைத்துக்கொண்டு இது கோழிக்கறியைவிட சுவையாக உள்ளது என கூறும் காணொளி பரவியது. இதனால் சீனர்களின் உணவுப்பழக்கமே இந்த கொரோனா வைரஸ் தொற்று பரவக் காரணம் என விவாதங்கள் எழுந்தன.
 
ஆனால் உண்மையில் இந்த காணொளி வுஹானிலோ சீனாவிலோ பதிவு செய்யப்படவில்லை. ஒரு பிரபல ஊடக தொகுப்பாளர், தனது பயண நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மேற்கு பசிஃபிக் பெருங்கடலில் உள்ள பலோவ் தீவில் இந்த காணொளியை பதிவு செய்துள்ளார்.
 
கடந்த 2016ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த காணொளி, வுஹானில் வைரஸ் தொற்று பரவ துவங்கிய பிறகு, மீண்டும் அனைத்து சமூக ஊடகங்களிலும் பகிரப்பட்டது.
 
இவ்வாறு விவாதங்கள் பரவியதும் அந்த காணொளியில் இடம் பெற்றிருந்த நிகழ்ச்சி தொகுப்பாளர், ''நான் பலோவ் தீவில் வாழும் மக்களின் அன்றாட வாழ்க்கையையே பதிவு செய்ய முயற்சித்தேன்'', ''ஆனால் வௌவால் இறைச்சியால் வைரஸ் தொற்று பரவும் என நான் எதிர்பார்க்கவில்லை,'' என்று கூறி காணொளி ஒன்றை பதிவு செய்து மன்னிப்பும் கோரினார்.
 
வுஹானின் கடல் உணவு சந்தையில், சட்ட விரோதமாக விற்கப்படும் வனவிலங்குகளில் இருந்துதான் கொரோனா வைரஸ் தொற்று தோன்றியதாக நம்பப்படுகிறது. ஆனால் சமீபத்தில் சீனாவில் நடத்தப்பட்ட ஆய்வில் வைரஸ் பரவ வௌவால் இறைச்சியும் காரணமாக இருக்கலாம் என கூறப்பட்டது. உண்மையில் கொரோனா வைரஸ் தொற்று உருவாகியதன் காரணம் குறித்து இன்னும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 
'கொரோனா வைரஸ் பாதிப்பு திட்டமிடப்பட்டது'
 
கடந்த வாரம் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒருவருக்கு உள்ளது என்பதை அந்நாட்டு அரசாங்கம் அதிகாரபூர்வமாக உறுதி செய்தது. இதன் பிறகு, கொரோனா வைரஸ் ஆய்வகத்திற்குள் மனிதரால் உருவாக்கப்பட்ட கொடிய தொற்று என்றும் அதற்கு 2015ம் ஆண்டே மருந்தும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கான காப்புரிமையும் உள்ளது என்றும், காப்புரிமை ஆவணங்களும் சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.
 
இந்த வைரஸ் மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்று முதலில் குற்றம் சாட்டியவர் சதிக் கோட்பாட்டாளரும், யூடியூப் பிரபலமுமான ஜோர்டான் சத்தர். இங்கிலாந்தின் பிர்பீரைட் நிறுவனம் கொரோனா வைரஸால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை சரி செய்யும் மருந்திற்கான காப்புரிமை 2015ம் ஆண்டே பெற்றுள்ளது என கூறும் பதிவு ஒன்றை சமூக ஊடகத்தில் பகிர்ந்தார்.
 
இந்தப் பதிவை ஆயிரக்கணக்கானோர் ட்விட்டரில் பகிர்ந்தனர். இதே பதிவை மருந்துகளுக்கு எதிராக செயல்படும் பல அமைப்புகள் ஃபேஸ்புக்கில் பகிர்ந்தன.
 
இதில் பில் அண்ட் மெலின்டா கேட்ஸ் பவுண்டேஷன் அறக்கட்டளைக்கும் தொடர்பு உள்ளது எனவும் கூறப்பட்டது. தடுப்பு மருந்து திட்டங்களுக்கு கேட்ஸ் பவுண்டேஷன் எவ்வளவு நிதியை ஒதுக்கியுள்ளது. இந்த நோயை திட்டமிட்டு பரப்புகிறீர்களா, மக்களுக்கு பயத்தை ஏற்படுத்த ஊடகங்களை பயன்படுத்துகிறீர்களா போன்ற பல கேள்விகளை ஜோர்டன் சத்தர் பதிவிட்டார்.
 
ஆனால், பிர்பிரைட் நிறுவனம் இந்த புதிய கொரோனா வைரஸ் கண்டுபிடிப்புக்கான காப்புரிமை பதிவு செய்யவில்லை. மாறாக கொரோனா வைரஸ் வகையை சேர்ந்த மற்றொரு வைரஸுக்கான காப்புப்புரிமையைத்தான் பெற்றுள்ளது. மேலும் அது கோழிப்பண்னையில் உருவாகும் வைரஸ் என்றும் பிர்பிரைட் நிறுவனம் விளக்கம் தருகிறது. ஆனால் இந்த வைரஸ் கண்டுபிடிப்புக்கும் கேட்ஸ் அறக்கட்டளை நிதி ஒதுக்கவில்லை என பிர்பிரைட் நிறுவனம் கூறுகிறது.
 
''உயிரி ஆயுத'' சதித்திட்டமா ?
 
ஆன்லைனில் வைரலாகிய மற்றொரு ஆதாரமற்ற கூற்று ''இது சீனா மீது தொடுக்கப்பட்ட உயிரி ஆயுத திட்டத்தின் ஓர் அங்கம்'' என்பதுதான். இது தொடர்பாக இணையத்தில் தேடினால் வாஷிங்டன் டைம்ஸ் பதிவு செய்த இரண்டு பகிர்வுகள் உயிரி ஆயுத கோட்பாடுகளுக்கு விளக்கம் அளிக்கிறது.
 
இது உயிரி ஆயுத திட்டமாக இருக்கலாம் என்று முதல் முதலில் கூறியவர் இஸ்ரேலிய ரானுவ உளவுத்துறையின் முன்னாள் அதிகாரி. ஆனால் இதை அதிகாரபூர்வமாக அவர் நிரூபிக்கவில்லை. இருப்பினும் இந்தப் பதிவை பலர் பகிர்கின்றனர்.
 
கனடிய அறிவியல் அறிஞருக்கு தொடர்பா?
 
கனடாவின் அறிவியல் அறிஞரான கியூ என்பவர் அவரது கணவர் மற்றும் சில மாணவர்களை சீன அரசாங்கம் வெளியேற்றியுள்ளது.
 
சீனாவில் உள்ள கல்வி ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றுக்கு கனடாவை சேர்ந்த கியூ இரண்டு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.