ஜனவரியில் திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்?
கருணாநிதி மற்றும் ஏ கே போஸ் ஆகியோரின் மறைவையொட்டி காலியாகி உள்ள திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 2-ந்தேதி திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ கே போஸ் மறைந்ததாலும் ஆகஸ்ட் 7-ந்தேதி திருவாரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கலைஞர் கருணாநிதி மறைந்ததாலும் அந்த இரு தொகுதிகளிலும் சட்டமன்ற உறுப்பினர்கள் இன்றி கடந்த 3 மாதங்களாக காலியாக உள்ளன.
இந்நிலையில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் 5 மாநில சட்டமன்ற தேர்தல்களோடு இந்த இரு தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்றிருந்த நிலையில் புயல் மற்றும் பருவமழையைக் காரணம் காட்டி தேர்தல் தேதியை அறிவிக்காமல் ஆணையம் இழுத்தடித்து வந்தது. இந்நிலையில் இன்று தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலில் வரும் ஜனவரி மாதம் இந்த இரு தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெர்வித்துள்ளது.
மேலும் தற்போது உயர்நீதிமன்றத் தீர்ப்பால் காலியாகியுள்ள 18 இடங்களுக்கும் அந்த 2 தொகுதிகளோடும் சேர்த்து தேர்தல் நடத்தப்படுமா எனவும் ஆலோசித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.