வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 29 ஜனவரி 2022 (14:58 IST)

ஆட்டோ சின்னம்தான் வேணும்னு கேக்கல! – புஸ்ஸி ஆனந்த் விளக்கம்!

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடும் நிலையில் ஆட்டோ சின்னம் கேட்கவில்லை என புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதை தொடர்ந்து தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகள் மற்றும் கூட்டணி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது.

விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பொதுவான சின்னமாக ஆட்டோ சின்னம் வழங்கக்கோரி விஜய் மக்கள் இயக்கம் தேர்தல் ஆணையத்திடம் கேட்ட நிலையில் அதற்கு தேர்தல் ஆணையம் மறுத்ததாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் இன்று விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கு பிறகு பேசிய இயக்க பொதுசெயலாளர் புஸ்ஸி ஆனந்த் “ஜய் மக்கள் இயக்கத்தில் மாவட்ட தலைவர்கள் , தேர்தல் பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட தலைவர்கள் , அகில இந்திய விஜய் மக்கள் இயக்க தலைமைக்கு வேட்பாளர்கள் பட்டியலை சமர்பிப்பர். அதன் பிறகு விஜய் வழிகாட்டுதல்படி வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், கட்சி சின்னம் குறித்து பேசிய அவர் “தேர்தலில் ஒரே சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பாக , உதாரணத்திற்குதான் ஆட்டோ சின்னத்தை கூறினோம். ஆட்டோ சின்னம்தான் வேண்டுமென கேட்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.