திங்கள், 18 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 9 மே 2016 (13:07 IST)

பிரபல மருத்துவர் கொடூர கொலை; பல கோடி மதிப்புள்ள பங்களாவை அபகரிக்க முயற்சியா?

சென்னையில் எழும்பூரில் பிரபல புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் ரோஹிணி பிரேம்குமார் மர்ம நபர்களால் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 

 
மருத்துவர் ரோகிணி பிரேம்குமார் [62] எழும்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் புற்றுநோய் சிகிச்சை நிபுணராக பணியாற்றி வந்தார். மேலும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனையிலும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார்.
 
மருத்துவர் ரோஹிணி அவர்களின் கணவர் ஜான் குருவில்லா அவர்களும் மருத்துவராக பணியாற்றியுள்ளார். அதேபோல, இவரது 87 வயது தாயார் சுபத்ரா நாயரும் மருத்துவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ரோஹிணிக்கு ஒரே ஒரு மகள் உள்ளார். அவர் தனியார் கல்லூரி ஒன்றில் பொறியியல் பயின்று வருகிறார்.
 
இவர்களது சொந்த ஊர் கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர் என்றாலும், கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக சென்னையில்தான் வசித்து வருகிறார்கள். கணவர் 20 ஆண்டுகளுக்கு முன்னதாக இறந்துவிட்டார். இதனையடுத்து, ரோஹினி தனது தாயார் மற்றும் மகளுடன் எழும்பூர் ரெயில் நிலையம் அருகேயுள்ள காந்தி-இர்வின் சாலையில் பங்களா வீட்டில் வசித்து வந்துள்ளார்.
 
ரோஹினி புற்றுநோயை குணப்படுத்தும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்ததாகவும், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு இவர் இலவசமாக சிகிச்சை அளித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுதவிர ஏராளமான ஆராய்ச்சி கட்டுரைகளையும், குடிசை வாழ் மக்களிடம் புற்றுநோயால் பாதிக்கப்படாமல் இருப்பது எப்படி? என்று பிரசாரம் மேற்கொண்டு வந்துள்ளார்.
 
இந்நிலையில், மருத்துவர் ரோஹினி தனது வீட்டின் பின்புறத்தில் உள்ள தோட்டப்பகுதியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையிலும், வாயில் ‘டேப்’ ஒட்டப்பட்ட நிலையில் டாக்டர் ரோகிணி ரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்துள்ளார்.
 
வழக்கமாக நடக்கவியலாத தனது தாயாருக்கு உணவு சமைத்து தருவதை வழக்கத்தை கொண்டிருந்த அவர், அன்று மதியம் வரை எவ்வித நடமாட்டமும் இல்லாததை அறிந்த அவரது தாயார் மெதுவாக நகர்ந்து தேடிப்பார்த்த பொழுதுதான் அவர் கொலை செய்யப்பட்டிருப்பதை பார்த்திருக்கிறார்.
 
பின்னர் தன்னிடம் மருத்துவ உதவியாளராக பணிபுரிந்த பரமசிவம் என்பவருக்கு தகவல் அளித்துள்ளார். உடனே பரமசிவம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். காவல் துறையினர், தடய அறிவியல் நிபுணர்களை வரவழைத்து பிணத்தை பரிசோதித்து பார்த்தனர்.
 
மருத்துவர் ரோகிணியின் வீட்டை அபகரிக்கும் நோக்கில் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல் துறையினர் கருதுகின்றனர். ஏனெனில் ரோஹினி கழுத்து மற்றும் விரல்களில் இருந்த தங்க நகைகளை கொலையாளிகள் விட்டுச்சென்றுள்ளனர்.
 
மேலும், இதற்கு முன்பாகவே சிலர் பங்களா வீடு தொடர்பாக அவரிடம் பிரச்சனை செய்துள்ளதாகவும் தெரிகிறது. சுமார், 10 கிரவுண்டு பரப்பளவு கொண்ட அந்த இடம் பல கோடி மதிப்புடையது என்பது குறிப்பிடத்தக்கது.