திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 18 நவம்பர் 2024 (15:17 IST)

சென்னையில் 100க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்கள் இடமாற்றமா? என்ன காரணம்?

சென்னையில் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும் நிலையில் அதற்கான தீர்வு காணும் முறையை ஆராய்ந்து அதை சோதனை முறையில் போக்குவரத்து காவல்துறையினர் செயல்படுத்தி வருகின்றனர்.
 
அந்த வகையில் சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகே இருக்கும் சிக்னலில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டதை அடுத்து, தொழிற்பேட்டை சிக்னல் அருகே இருந்த பேருந்து நிறுத்தம் மாற்றப்பட்ட பிறகு ஓரளவு போக்குவரத்து நெரிசல் குறைந்தது.
 
அந்த வகையில் சென்னை மாநகரில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக இருக்கும் பேருந்து நிறுத்தங்களை மாற்ற ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சிக்னல், மேம்பாலம் அருகே உள்ள பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி தொலைவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக சென்னையில் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்கள் இடமாற்றம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
கடந்த 30 ஆண்டுகளில் பல பேருந்து நிறுத்தங்கள் இடமாற்றம் செய்யப்படவில்லை என்பதால், பேருந்து நிறுத்தங்கள் மாற்றப்பட வேண்டும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
Edited by Mahendran