தனியார் பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல்: போலீஸார் சோதனை
அரூர் அருகே தனியார் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக செல்லிடப்பேசியில் வந்த மிரட்டலையெடுத்து போலீஸார் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனர்.
அரூர் வட்டம், எச்.தொட்டம்பட்டியில் உள்ள தனியார் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் எல்.கே.ஜி முதல் 12-ம் வகுப்பு வரையிலும் 1,850 மாணவ, மாணவியர்கள் படிக்கின்றனர்.
இந்த பள்ளியில் பணிபுரியும் ஜி.ராதாகிருஷ்ணன் என்பவருக்கு காலை 9.30 மணியளவில் மர்ம நபர் ஒருவர் செல்லிடப்பேசியில் பேசினாராம். அப்போது உங்கள் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், பள்ளிப் பேருந்து ஓட்டுநர்கள் சிலர் வெடிகுண்டு வைப்பதற்கான வெடிபொருள்களை எங்களிடம் வாங்கியுள்ளனர். அந்த நபர்கள் பள்ளி வளாகத்தில் 10 இடங்களில் வெடிகுண்டு வைப்பதாக பேசினார்கள். எந்த, எந்த இடத்தில் வெடிகுண்டு வைக்க திட்டமிட்டுள்ளனர் என்பது குறித்த வரைபடத்தை தருமபுரியில் ஒரு ஜெராக்ஸ் கடையில் நகல் எடுத்தனர் எனவும் அந்த மர்ம நபர் செல்லிடப்பேசியில் தெரிவித்தாராம்.
இதனையெடுத்து இந்த சம்பவம் குறித்து பள்ளி முதல்வர் கா.தமிழரசன் (34) அரூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் ஜாபர் உசேன், காவல் உதவி ஆய்வாளர் நீலதங்கம் ஆகியோர் அடங்கிய வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்பு பிரிவினர், மோப்பநாய் சிந்து உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பள்ளி வளாகம், பள்ளிப் பேருந்துகள், வகுப்பறைகள், மாணவர்களின் புத்தக பைகள் உள்ளிட்டவைகளை போலீஸார் சோதனை செய்தனர். முன்னதாக பள்ளி நிர்வாகத்துக்கு செல்லிடப்பேசியில் பேசிய மர்ம நபர் யார், எங்கிருந்து பேசினார் என்பது குறித்து தனிப்படை போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
பள்ளி நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக யாரேனும் மிரட்டல் விடுத்தனரா, அல்லது பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆசிரியர்கள், பணியாளர்கள் யாரேனும் வெடிகுண்டு இருப்பதாக பொய்யான தகவல்களை தெரிவித்தனரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்துகின்றனர்.
சி.ஆனந்தகுமார் - செய்தியாளர்