திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 12 பிப்ரவரி 2019 (13:08 IST)

பொன்னாரின் போட்டோஷாப் லீலை – நெட்டிசன்களுக்கு நல்ல விருந்து !

பாஜக மத்திய அமைச்சரின் புகழை விளக்கும் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வலம்வர ஆரம்பித்துள்ளது. அந்த புகைப்படத்தை வைத்து நெட்டிசன்கள் அவரைக் கலாய்க்க ஆரம்பித்துள்ளனர்.

பாஜக குட்டிக்கரணம் போட்டாலும் தமிழகத்தில் தாமரை மலரவே மலராது என தமிழக மக்கள் பாடம் புகட்டி வருகின்றனர். ஆனால் பாஜக விடாமுயற்சியாக தமிழகத்தைக் காவியாக்க முயன்று வருகின்றது. அதற்கு மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் ஆகியோர் கடுமையாகப் போராடி வருகின்றனர்.

ஆனால் இவர்கள் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் மக்களுக்கு சிரிப்பைதான் வரவைத்துக் கொண்டிருக்கின்றன. அட்மின் ட்ரோல், தாமரை மலரும் ட்ரோல், நானும் திராவிடன் ட்ரோல் எனப் பாஜகவுக்கென்று மட்டுமே தனியாக ட்ரோல்கள் தமிழகத்தில் உருவாகி உலாவந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் இப்போது மீண்டும் ஒரு பாஜக பிரமுகர் மீண்டும் நெட்டிசன்களின் மூளைக்கு வேலை வைத்துள்ளார். அவர் வேறு யாருமில்லை பாஜக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்தான். பொன்னாரின் தியாகத்தை (சிரிக்கக்கூடாது) விளக்கும் புகைப்படம் ஒன்று பாஜகவால் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.

அந்தப் புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள நான்குப் புகைப்படங்களில் முதல் புகைப்படத்தில் இடம்பெற்றிருப்பது தமிழக முன்னாள் முதல்வர் காமராசருடையது. அந்தப் புகைப்படம் கொஞ்சம் கொஞ்சமாக உருமாற்றம் அடைந்து நான்காவதுப் புகைப்படத்தில் பொன் ராதாகிருஷ்ணனாக மாறுவது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த போஸ்டரில் ‘தியாகத்தின் மறு உருவமே. வாழும் காமராஜரே’ எனவும் பொன்னாரைக் குறிப்பிட்டு எழுதப்பட்டுள்ளது.

சமீபத்தில் மோடி தமிழகத்தில் காமராஜர் ஆட்சி நடத்தியதைப் போல தான் இந்தியாவை ஆட்சி செய்து வருவதாகக் கூறியிருந்தார். அதேப் போல இப்போது தங்களுக்கு சம்மந்தமே இல்லாத காங்கிரஸை சேர்ந்த காமராஜரைப் பயன்படுத்தி பொன்னாருக்கான விளம்பரம் உருவாக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் காமராஜரின் ஆதரவாளர்களின் வாக்குகளைப் பெற பாஜக பயன்படுத்தும் கேவலமான உத்தி எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகள் ஒருபுறம் இருக்க இப்போது சமூக வலைதளங்களில் இந்தப் புகைப்படம் கடுமையான விமர்சனங்களையும் கேலிகளையும் எதிர்கொண்டு வருகிறது.