செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 28 ஏப்ரல் 2020 (12:37 IST)

நாளையே முழு மதுவிலக்கு என்றாலும் மகிழ்ச்சிதான்! – பாஜக எல்.முருகன்

ஊரடங்கு முடிய உள்ள நிலையில் மதுக்கடைகளை திறக்காமல் முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டுமென தமிழக பாஜக தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் மது கிடைக்காமல் சிலர் உயிரிழந்த சம்பவங்கள் ஏற்பட்டாலும் நாளடைவில் மது இல்லாமலே சிலர் வாழ்ந்து வருகின்றனர். ஒருபக்கம் ஊரடங்கை காரணமாக கொண்டு கள்ளச்சாராய வியாபாரங்களும் முளைவிட தொடங்கியுள்ளது.

மே 3உடன் ஊரடங்கு முடியும் நிலையில் மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்படக் கூடாது என பாமகவினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் மது விலக்கு குறித்து பேசியுள்ள தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் “தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் நல்ல விஷயம் மக்கள் குடி பழக்கத்தை விட்டுள்ளது. ஊரடங்கின் மூலம் மதுவிலக்கை அமல்படுத்துவது சாத்தியம் என தெரிய வந்துள்ளது. எனவே ஊரடங்கு முடிந்த பின்னர் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க இது சிறந்த வாய்ப்பு” என்று கூறியுள்ளார்.

கடந்த 32 நாட்களாக டாஸ்மாக் கடைகள் இயங்காவிட்டாலும் கூட தமிழக பொருளாதாரத்தில் கொரோனாவால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் மதுக்கடைகளை முழுவதுமாக மூடுவது என்பது தமிழக அரசின் பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்கும் என்பதால் மதுக்கடைகளை மூடுவது குறித்து உடனடி முடிவுகள் எடுப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என பேசிக்கொள்ளப்படுகிறது.