1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 29 ஜனவரி 2017 (12:44 IST)

ஜல்லிக்கட்டுக்கு எதிராக அஞ்சலி வழக்கு தொடர தடை!

ஜல்லிக்கட்டுக்கு எதிராக, அஞ்சலி சர்மா வழக்கு தொடருவதற்கு தடை விதித்துள்ளதாக விலங்குகள் நலவாரியம் தெரிவித்துள்ளது.


 

ஜல்லிக்கட்டுக்கு எதிராக தொடர்ந்த வழக்கை திரும்பப்பெற வேண்டும் என்று அஞ்சலி சர்மாவுக்கு விலங்குகள் நல வாரியச் செயலாளர் ரவிக்குமார் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார். ஆனால், வழக்கை திரும்பப் பெற முடியாது என்று அஞ்சலி சர்மா கூறி விட்டார்.

இதையடுத்து, தற்போது அஞ்சலி சர்மாவுக்கு விலங்குகள் நல வாரியம் தடை விதித்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா நிறுவனம் தொடர்ந்த வழக்கு வெளியில் பேசப்பட்டது. ஆனால், இந்திய அரசின் நிறுவனமான, விலங்குகள் நலவாரியம் தொடர்ந்த வழக்குதான் இதில் பிரதானமானது என்பதை பலரும் கவனத்தில் கொள்ளவில்லை.

தற்போது, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்து, தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்துள்ள நிலையில், அதற்கு எதிராகவும் இந்திய விலங்குகள் நலவாரியம்தான் வழக்கு தொடர்ந்துள்ளது. கடந்த 25ஆம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, விலங்குகள் நலவாரியம் சார்பில் அரிமா சுந்தரம் ஆஜராகி வாதாடினார்.

இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், விலங்குகள் நலவாரியத்தின் அனுமதி இல்லாமலேயே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருப்பதாக மத்திய பாஜக அரசு சமாளித்தது.

விலங்குகள் நலவாரிய உறுப்பினர் ரவிக்குமார், வழக்கை திரும்பப் பெறுமாறு கூறியும், அதை அஞ்சலி சர்மா ஏற்க மறுத்துவிட்டதாகவும் குறிப்பிட்ட அவர், தற்போது அஞ்சலி சர்மா வழக்கு தொடருவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு எதிராக, விலங்குகள் நலவாரியம் சார்பில் அஞ்சலி சர்மா தொடர்ந்த வழக்கு செவ்வாயன்று விசாரணைக்கு வருகிறது. பீட்டா, கியூப்பா உள்ளிட்ட விலங்குகள் நல அமைப்புகளும் தமிழக அரசின் சட்ட மசோதாவுக்கு எதிராக வழக்குகளைத் தொடர்ந்துள்ளன.