தன்னாட்சி பெற்ற பொறியியல் கல்லூரிகளில் நடைபெறும் செமஸ்டர் தேர்வுகளில் பல்கலைக்கழக வினாத்தாள் அடிப்படையில் தேர்வை நடத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு பொறியியல் கல்லூரிகள் இயங்கி வரும் நிலையில் அவை சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன. இந்த கல்லூரிகளில் நடைபெறும் செமஸ்டர் தேர்வுகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்தே வினாத்தாள்கள் வழங்கப்படும். இவை அல்லாமல் அண்ணா பல்கலைக்கழகத்தின் அனுமதி பெற்ற 116 தன்னாட்சி பொறியியல் கல்லூரிகளும் தமிழகத்தில் இயங்கி வருகின்றன.
இந்த தன்னாட்சி உரிமை பெற்ற கல்லூரிகளில் வினாத்தாள்களை கல்லூரிகளே தயாரித்து தேர்வு நடத்தி, விடைத்தாள் திருத்தி, மதிப்பெண்களை வழங்கிக் கொள்ள முடியும். ஆனால் இவ்வாறு தேர்வு தன்னாட்சி கல்லூரிகளுக்கு உள்ளேயே நடைபெறுவதால் மாணவர்களின் திறன் வளர்ச்சி குறித்த ஐயப்பாடுகளும் எழுந்துள்ளன.
இதுகுறித்து இன்று நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மாணவர்களின் கல்வித்தரத்தை ஆய்வு செய்ய இனி அனைத்து செமஸ்டர்களிலும் தன்னாட்சி பொறியியல் கல்லூரிகளில் ஒரு பாடத்திற்கு மட்டும் அண்ணா பல்கலைக்கழகமே வினாத்தாள் தயாரித்து, தேர்வு நடத்தி, வினாத்தாள் திருத்தம் மற்றும் மதிப்பெண்களை வழங்கும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K