1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 3 செப்டம்பர் 2024 (17:09 IST)

பெண் டிஎஸ்பி மீது தாக்குதல்.! விடியா திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

edapadi
மக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினருக்கே, தங்கள் பணியின்போது தாக்கப்படும் அளவு பாதுகாப்பில்லாத சூழலை உருவாக்கியுள்ள இந்த விடியா திமுக அரசுக்கும், பொம்மை முதல்வருக்கும் கண்டனம் தெரிவிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
 
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் போராட்டத்தின் போது கலவரம் ஏற்படாமல் தடுக்க முற்பட்ட பெண் துணை கண்காணிப்பாளர் காயத்ரி அவர்களை போராட்டக்காரர்கள் தலை முடியை இழுத்து தாக்க முயன்றதாக செய்திகளில் வரும் காட்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.
 
விடியா திமுக ஆட்சியில் சட்டத்தின் மீது எந்தவித பயமும் இன்றி யாரை வேண்டுமானாலும் தாக்கலாம் என்ற அச்சமற்ற அவலநிலையில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்று எடப்பாடி தெரிவித்துள்ளார். மக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினருக்கே, தங்கள் பணியின்போது தாக்கப்படும் அளவு பாதுகாப்பில்லாத சூழலை உருவாக்கியுள்ள இந்த விடியா திமுக அரசுக்கும், பொம்மை முதல்வருக்கும் கடும் கண்டனம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
அருப்புக்கோட்டை பெண் டிஎஸ்பி காயத்ரி அவர்களை தாக்கிய சம்பவத்தில் ஈடுபட்டோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், இனி சீருடையில் உள்ள காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தும் தைரியம் யாருக்கும் வராத அளவிற்கு தண்டனை கிடைக்கப்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 
காவல்துறையினர் உட்பட தமிழ்நாட்டில் அனைவருக்குமான பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துமாறும் விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன் என்று எடப்பாடி பழனிச்சாமி பதிவிட்டுள்ளார்.