திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 28 ஜூலை 2024 (10:25 IST)

செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான ரூ.298.21 கோடி சொத்துக்கள் முடக்கம்.!

ED
செட்டிநாடு குழுமத்துக்கு சொந்தமான நிறுவனத்தின் ரூ,298 கோடி மதிப்பிலான சொத்தை அமலாக்கத்துறை முடக்கியிருக்கிறது.
 
விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து தமிழக துறைமுகங்களுக்கு கடல் வழியாக நிலக்கரியை எடுத்து வருவதற்கான ஒப்பந்த பணியை செட்டிநாடு குழுமத்துக்கு சொந்தமான தென்னிந்திய கார்ப்பரேஷன் நிறுவனம் செய்து வந்தது. தென்னிந்திய கார்ப்பரேஷன் நிறுவன அதிகாரிகள், அப்போதைய மின்வாரிய அதிகாரிகள் உடந்தையுடன் போலி கணக்கு காட்டி ரூ.900 கோடி முறைகேட்டில் ஈடுபட்டதாக அறப்போர் இயக்கம் சார்பில் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. 
 
அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய விசாரணையில் இந்த நிறுவனம் கடந்த 2011 முதல் 2016-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் நிலக்கரியை கையாள்வதற்கு ரூ.234 கோடி மட்டும் செலவு செய்துவிட்டு ரூ.1,267 கோடிக்கு போலி கணக்கு காட்டி முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக குற்றச்சாட்டு பதிவு செய்தனர்.
 
இந்த மோசடி செயலுக்கு உடந்தையாக இருந்த மின்வாரிய அதிகாரிகள் மற்றும் தென்னிந்திய கார்ப்பரேஷன் நிறுவனத்தின் அதிகாரிகள் உள்பட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தினார்கள். மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த ஆண்டு சோதனை நடந்தது.
 
இந்த சோதனையில் 2001-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரையில் இந்த முறைகேடு நடைபெற்றதற்கான முக்கிய ஆவணங்கள் சிக்கியது. இதையடுத்து செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான தென்னிந்திய கார்ப்பரேஷன் நிறுவனத்தின் ரூ.360 கோடி நிரந்தர வைப்பு நிதியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு முடக்கினார்கள்.


இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் செட்டிநாடு நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.298 கோடி மதிப்பிலான 300 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் தற்போது முடக்கியுள்ளனர்