வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 28 ஜூலை 2024 (09:30 IST)

சரக்கில் கிக் இல்லை.! 4 வகை மதுபானங்கள் விற்க தடை..!

ஆல்கஹால்அளவு குறைவாக இருப்பதாக கூறி, நான்கு வகை மதுபானங்களை விற்க தடை விதித்து டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
 
மதுபானங்களில் வரையறுக்கப்பட்ட அளவு ஆல்கஹால் இருந்தால் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.  குறிப்பிட்ட மதுபானங்களின் ஆல்கஹால் அளவு, 42.84 சதவீதம் இருக்க வேண்டும். ஆனால் ஒரு சில குறிப்பிட்ட மதுபானங்களில் வரையறுக்கப்பட்ட அளவைவிட ஆல்கஹால் குறைவாகவும், சிலவற்றில் அதிகமாக இருப்பதும் தெரியவந்தது.  இந்நிலையில் ஆல்கஹால் அளவு குறைவாக இருந்ததாக கூறி நான்கு வகையான மதுபானங்களை திரும்பப் பெறுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

இதுகுறித்து டாஸ்மாக் கடைகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ட்ரோபிகானா வி.எஸ். ஓ.பி., பிராந்தி பேட்ச் எண் 013/ 2020, ஓல்டு சீக்ரெட் பிராந்தி பேட்ச் எண் 847/ 2018, வீரன் ஸ்பெஷல் பிராந்தி பேட்ச் எண் 082/ 2024 ஆகிய சரக்குகள் தங்கள் கடையில் இருந்தால், உடனே அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட பேட்ச் எண், தேதி உள்ள சரக்குகளை கண்டிப்பாக விற்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் வீரன் ஸ்பெஷல் பிராந்தி - 180 மி.லி., பேட்ச் எண் 082 - 6.7.2024 விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது.


கடை பணியாளர்கள் மேற்கண்ட பிராந்திகளை விற்க வேண்டாம் எனவும் கடையில் எவ்வளவு சரக்கு இருப்பு உள்ளது என்று கணக்கீடு செய்து, அலுவலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.