வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 6 ஏப்ரல் 2020 (08:53 IST)

அனுமதி அட்டை இருந்தா வெளியே போகலாம்! – அரியலூர் ஆட்சியரின் பக்கா ஐடியா

அரியலூரில் மக்கள் ஊரடங்கின்போதும் வெளியே சுற்றுவதை கட்டுப்படுத்துவதற்காக புதிய விதிமுறை அமலுக்கு வந்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும் ஊரடங்கை மக்கள் பலர் மதிக்காமல் வெளியே சுற்றி வருவது போலீஸாருக்கு பெரும் தலைவலியாக மாறி வருகிறது. மக்கள் வெளியே வருவதை கட்டுப்படுத்த பல மாநில அரசுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழக மாவட்டமான அரியலூரில் புதிய விதிமுறை நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி ஊரடங்கின் போது வெளியே செல்வதற்கு வாரத்தில் இருமுறை மட்டுமே வாய்ப்புகள் வழங்கப்படும். இதற்காக அரியலூர் முழுவதும் உள்ள 22,760 வீடுகளுக்கு மூன்று வண்ணங்களில் அனுமதி அட்டை வழங்கப்பட இருக்கின்றன.

பச்சை அட்டை வைத்திருப்பவர்கள் திங்கள் மற்றும் வியாழக்கிழமையிலும், நீல நிற அட்டை வைத்திருப்பவர்கள் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளிலும், இளஞ்சிவப்பு அட்டை வைத்திருப்பவர்கள் சனி மற்றும் புதன்கிழமைகளிலும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே செல்ல அனுமதிக்கப்படுவர்.

அத்தியாவசிய பொருட்களை வாங்க காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரைக்குமே நேரம் வழங்கப்படும். குறிப்பிட்ட கிழமைகளை தவிர்த்து வேறு நாளில் வெளியே வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.