தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமைகளுக்கு தண்டனைகள் அதிகரிக்கப்பட்டபோதும் தொடர்ந்து வன்கொடுமை சம்பவங்கள் நடந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தலைநகர் சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் வெளியாள் ஒருவரால் மிரட்டப்பட்டு வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த புகாரில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வரும் நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் அதன் வளாகங்கள் அனைத்திலும் காவலுக்கு ஆட்கள் போடப்பட்டு அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை என்ற அளவிற்கு பாதுகாப்பு போடப்பட்டது. ஆனால் மீண்டும் ஒரு வன்கொடுமை சம்பவம் அண்ணா பல்கலையில்தான் நடக்கும் என்று சொல்லமுடியுமா?
சமீபத்தில் கிருஷ்ணகிரியில் 8வது படிக்கும் மாணவியை அங்கு பணிபுரியும் 3 ஆசிரியர்களே பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அங்கும் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் பள்ளி செல்லும் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் பள்ளியில் நடந்த குழந்தைகள் நலக்குழும முகாமில் சிறுமி ஒருத்தி தனக்கு நேரும் பாலியல் சீண்டல்களை சொல்ல தொடங்க, பல சிறுமிகளும் அப்படியான சம்பவங்களை சொன்னபோதே அந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது.
தலைநகர் சென்னையில் அமைக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்திலேயே மேற்கு வங்க இளம்பெண்ணை சில விஷமிகள் கடத்த முயன்றிருக்கின்றனர். இளம்பெண் கத்தி கூச்சலிட்டதாலும், அப்பகுதி மக்கள் வண்டியை துரத்தி வந்ததாலும் பெண்ணை இறக்கி விட்டு ஓடியுள்ளனர். இந்த வழக்கிலும் ஆட்டோ டிரைவர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அனைத்து வன்கொடுமை சம்பவங்களிலும் போலீஸார் உடனடி நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்வது சிறப்பானதே. ஆனால் அதேசமயம் இந்த சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க என்ன செய்வது என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். சமீபத்தில்தான் இவ்வாறான பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கும் சட்ட திருத்தம் அமலுக்கு வந்தது. அப்படியும் இந்த குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடப்பது மக்களிடையே பீதியான நிலையையே ஏற்படுத்தி வருகிறது.
மானாமதுரை சம்பவத்தில் கூட குழந்தைகள் நலக்குழும முகாம் நடத்தப்பட்டதாலேயே இந்த சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டும் சமூக ஆர்வலர்கள் பலரும் விடுக்கும் கோரிக்கை, அனைத்து பள்ளிகளிலும் இப்படியான குழந்தைகள் நலக்குழும முகாம்களை நடத்த வேண்டும் என்பதுதான். குற்றம் செய்தவர்களுக்கு உடனடியாக தண்டனை கிடைத்தாலும் கூட, குற்றத்தை நடக்காமல் செய்வதே விவேகமான அணுகுமுறை என கருத்து தெரிவிக்கின்றனர் பலரும். இதுகுறித்து தமிழக அரசு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.