செவ்வாய், 25 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 25 பிப்ரவரி 2025 (10:31 IST)

காளியம்மாளை தொடர்ந்து மற்றொரு முக்கியப்புள்ளி விலகல்! - காணாமல் போகும் நாம் தமிழர் கட்சி?

நாம் தமிழர் கட்சியிலிருந்து அடுத்தடுத்து பல முக்கிய நிர்வாகிகள் விலகி வரும் நிலையில் இன்று ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளரும் விலகியுள்ளார்.

 

சீமானின் நாம் தமிழர் கட்சி இதுநாள் வரை பல உள்ளாட்சி, சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களிலும் தனித்து நின்று போட்டியிட்டு வந்தது. ஆனால் சமீபமாக நாம் தமிழர் கட்சிக்குள் பல கோஷ்டி மோதல்கள் எழுந்துள்ளதாக தெரிகிறது. முக்கியமாக கட்சி ஒருங்கிணைப்பாளரான சீமான் தன்னிச்சையாக முடிவுகள் எடுப்பதாகவும், மாவட்ட நிர்வாகிகளை மதிப்பதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில் நா.த.கவை சேர்ந்த பலர் கட்சியை விட்டு வெளியேறி வருகின்றனர்.

 

நாம் தமிழர் கட்சியின் நட்சத்திர பேச்சாளராகவும், ஐகானாகவும் விளங்கிய காளியம்மாள் நேற்று நாதகவை விட்டு விலகுவதாக அறிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து இன்று ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் பாவேந்தன் தனது ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டவர்களுடன் கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். 

 

சீமான் தொண்டர்களை அரவணைக்காமல் செல்வதுடன், தமிழ் தேசியத்தையும், பெரியாரையும் எதிரெதிராக நிறுத்துவது போன்ற செயல்களை செய்வது ஏற்புடையதாக இல்லை என்று நாதக தொண்டர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இதனால் நாம் தமிழர் கட்சி தொடர்ந்து வலு இழந்து வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது.

 

Edit by Prasanth.K