தொலைபேசி அழைப்புகளை நம்பி கல்லூரியை தேர்வு செய்ய வேண்டாம்: அண்ணா பல்கலை
தொலைபேசியில் வரும் அழைப்புகளை நம்பி கல்லூரிகளை தேர்வு செய்ய வேண்டாம் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மாணவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தற்போது நடைபெற்று வரும் நிலையில் சில பொறியியல் கல்லூரிகளில் இருந்து மாணவர்களுக்கு அழைப்பு வருவதாகவும் படிப்பு செலவை நாங்களே ஏற்றுக் கொள்கிறோம் என்று ஏமாற்று வேலைகள் நடந்து வருவதாகவும் புகார்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
குறிப்பாக அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களை குறி வைத்து சில தனியார் கல்லூரி மாணவர்கள் அழைப்பு விடுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் அவர்கள் இது குறித்து கூறிய போது தொலைபேசி வழியாக வரும் அழைப்புகளை நம்பி மாணவர்கள் கல்லூரிகளை தேர்வு செய்ய வேண்டாம் என்றும் தரமற்ற கல்லூரியில் இருந்து தான் அழைப்பு வரும் என்றும் தரமான கல்லூரிகளை நாம் தான் தேடி கண்டுபிடித்து போய் சேர்ந்து கொள்ள வேண்டும் என்றும் இதில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இரண்டாவது சுற்று கலந்தாய்வு இன்று தொடங்கும் நிலையில் மாணவர்கள் தாங்கள் சேரும் கல்லூரிகளை சரியாக தேர்வு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Edited by Mahendran