அக்னி கலசத்துக்கு பதிலா தேவர் படம் இருந்திருந்தா..? – பாரதிராஜாவுக்கு அன்புமணி கேள்வி!
ஜெய்பீம் படத்திற்கு ஆதரவாக பாரதிராஜா கடிதம் எழுதிய நிலையில் அவரிடம் கேள்வி எழுப்பி அன்புமணி பதில் கடிதம் எழுத்தியுள்ளார்.
நடிகர் சூர்யா நடித்து த.செ.ஞானவேல் இயக்கத்தில் வெளியான படம் ஜெய்பீம். இருளர் பழங்குடி மக்களின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் பலரது பாராட்டுகளை பெற்றது.
அதேசமயம் இந்த படத்தின் வன்னியர் சமுதாயத்தை தவறாக சித்தரித்துள்ளதாக பாமக எம்.பி அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் திரைப்படத்தை அரசியலாக்க வேண்டாம் என ஜெய்பீம் படத்திற்கு ஆதரவாக அன்புமணி ராமதாஸுக்கு இயக்குனர் பாரதிராஜா கடிதம் எழுதியிருந்தார்.
அதற்கு தற்போது பதில் கடிதம் எழுதியுள்ள அன்புமணி ராமதாஸ் “ஜெய்பீம் படத்தில் அக்னி கலசத்திற்கு பதிலாக தேவர் படம் இருந்திருந்தால், நீங்களும் தேவர் சமுதாயமும் சும்மா இருப்பீர்களா? ஜெய்பீம் திரைப்பட சர்ச்சை சாதி பிரச்சினையோ, அரசியல் பிரச்சினையோ அல்ல. இது ஒரு சமூக பிரச்சினை” என பதில் கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து அரசியல், சினிமா பிரபலங்களிடையே இந்த பட விவகாரத்தால் ஏற்படும் விவாதங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.