1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (09:44 IST)

முதல்வரின் வளர்ப்பு நான்.. ஏமாந்து போக மாட்டேன்! – அமைச்சர் அன்பில் மகேஷ்!

கல்வித் தொலைக்காட்சி சி.இ.ஓ நியமன சர்ச்சை குறித்து கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சியின் முதன்மை செயல் அதிகாரியாக மணிகண்ட பூபதி நியமிக்கப்பட்டதாக வெளியான அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியது. பள்ளிக்கல்வித்துறையை சாராத ஒருவர் முதன்மை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளது கட்சியை சேர்ந்தவர்களிடமே அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் அவரது பணி நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் அமைச்சர் அன்பில் மகேஷ் பதவி விலக வேண்டும் என பல ட்விட்டரில் #Resign_AnbilMahesh என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்ய தொடங்கினர்.

இந்த விவகாரம் குறித்து சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் “கல்வி தொலைக்காட்சியின் தரத்தை உயர்த்த சி.இ.ஓ நியமிக்க முடிவு செய்தோம். 79 பேர் விண்ணப்பித்த நிலையில் அதில் 3 பேரை தேர்வு கமிட்டியினர் தேர்ந்தெடுத்தனர். அதில் ஒருவர் பின்புலம் குறித்து சர்ச்சைக்கள் நிலவுவதால் அவரது பணி நியமனம் நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளேன்.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் வளர்ப்பு நான். எந்த விதத்திலும் ஏமாந்து போக மாட்டேன். இந்த விவகாரம் தொடர்பாக விமர்சனங்கள் கோரிக்கைகள் வைத்த அனைவருக்கும் நன்றி. நீங்கள் என்னை பதவி விலக சொல்லி ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்தாலும், நீங்கள் வைக்கும் விமர்சனங்களை நான் நேர்மறையாகவே எடுத்துக் கொள்வேன்” என தெரிவித்துள்ளார்.