இடம் மாறுகிறதா அமமுக கட்சி அலுவலகம் ? – இசக்கி சுப்பையா குழப்பமான பதில் !
இசக்கி சுப்பையாவின் விலகலால் அமமுக கட்சி அலுவலகத்தை இடம் மாற்ற வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
திமுக, அதிமுக ஆகியக் கட்சிகளுக்கு மாற்றாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட அமமுக, மக்களவை மற்றும் இடைத்தேர்தல் தோல்விகளால் துவண்டு போயுள்ளது. ஏற்கனவே தங்களது முக்கிய நிர்வாகியான செந்தில் பாலாஜியை திமுக தாரைவார்த்தது போல இப்போது தங்க தமிழ்ச்செல்வனையும் இழந்துள்ளது. இதனால் அமமுக அரசியல் ரீதியாக நெருக்கடியில் உள்ளது.
இந்நிலையில் மேலும் ஒரு இடியாக தென் சென்னை தொகுதியில் வேட்பாளராக களமிறங்கிய இசக்கி சுப்பையாவும் இப்போது அமமுக வில் இருந்து விலகி அதிமுக வில் இணையப் போவதாக அறிவித்தார். அமமுக வின் இப்போதைய கட்சி அலுவலகம் இவரது நிறுவனத்துக்கு சொந்தமான கட்டிடத்தில் தான் இயங்குகிறது. அதனால் கட்டிடத்தில் இருந்து கட்சி அலுவலகம் காலி செய்யப்படுமா என்ற கேள்விக்கு இசக்கி சுப்பையா ‘ அது எனது மகன் பொறுப்பு வகிக்கும் நிறுவனத்துக்கு சொந்தமானக் கட்டிடம் . அது குறித்து அவர் முடிவு எடுப்பார். ஒப்பந்தத்தில் உள்ளபடியே நடக்கும்’ எனக் கூறியுள்ளார்.
விசாரித்ததில் அந்தக் கட்டிடம் 99 ஆண்டுக்கான நீண்ட லீசுக்காக விடப்பட்டுள்ளதாக தெரிகிறது. அமமுக தங்கள் கட்சிப் பதிவு விளம்பரத்தில் இந்த முகவரியையேக் கொடுத்துள்ளதால் கட்டிட மாற்றம் இப்போது இருக்காது எனத் தெரிகிறது.