நான் அரசியலுக்கு வர தகுதியற்றவன்: கமல்ஹாசன்
நான் மிகவும் கோபக்காரன். கோபக்காரர்கள் அரசியலுக்கு லாயக்கில்லை, எதையும் நடுநிலையாக அணுகும் அரசியல்வாதிகள் தான் இன்று நமக்கு தேவை என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தற்போதைய தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆங்கில செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த கமல்ஹாசன் கூறியதாவது:-
ஊழல் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டால் குற்றவாளி என்று தண்டிக்கப்பட்ட பின்னர் சசிகலாவின் குடும்பம் என்னும் கிரிமினல் கூட்டத்தாரால் இந்த மாநிலத்தின் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
நான் கூறுவது உண்மை என்பது நீதிமன்றத்தால் மீண்டும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கூட குற்றம்சாட்டப்பட்டவர்தான்.
தமிழ்நாடு சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை தீர்மானத்தில் வேண்டுமானால் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றிருக்கலாம்; ஆனால், தெருக்களில் உள்ள உணர்ச்சி கொந்தளிப்பு வேறு எதையோ குறிப்பிடுகிறது.
நான் மிகவும் கோபக்காரன், அரசியலுக்கு லாயக்கில்லை. எதையும் நடுநிலையாக அணுகும் அரசியல்வாதிகள் தான் இன்று நமக்கு தேவை. தற்போது நானும் கோபமாக இருக்கிறேன், மக்களும் கோபமாக இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.