இரட்டை இலை சின்னம் வழக்கு: எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு தள்ளுபடி..!
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் உரிமையியல் வழக்கு முடியும் வரை இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கூடாது என்று கோரிக்கை விடுத்து பதிவான மனுக்களை தேர்தல் ஆணையம் விசாரணை செய்ய தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
இதனை அடுத்து, அதிமுக பொதுச்செயலாளர் பதவி, இரட்டை இலை சின்னம் ஆகிய விவகாரங்கள் தொடர்பான விசாரணைகளை தேர்தல் ஆணையம் நடத்த தடை இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம், சின்னம் ஒதுக்கீட்டு விதிகளின் அடிப்படையில் விசாரணையை தொடங்கலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த மனுவை விசாரணை செய்ய அதிகாரம் உள்ளதா என்பதை தேர்தல் ஆணையமே ஆய்வு செய்து, அதன் பிறகு விசாரணையை தொடங்கலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது அவருக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இந்த தீர்ப்பு குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்த போது, "இன்று உயர்நீதிமன்றம் ஒரு நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளது. தர்மமே வெல்லும்," என்று அவர் கூறியுள்ளார்.
Edited by Mahendran