அனுமதி வழங்கப்பட்ட சில மணி நேரங்களில் மீண்டும் குளிக்க தடை: குற்றாலம் வந்த சுற்றுலா பயணிகள் அதிருப்தி..
பழைய குற்றாலத்தில் அனுமதி வழங்கப்பட்ட சில மணி நேரங்களில் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இன்று காலை 6 மணி முதல் பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் நீரின் அளவு திடீரென அதிகரித்ததால் பழைய குற்றால அருவியில் குளிக்க மீண்டும் தடை செய்யப்பட்டது. மேலும் ஐந்தருவியிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
ஏற்கனவே மெயின் அருவி கரையில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் அங்கு குளிக்க ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளதால் குற்றாலம் வந்த சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஒரு வாரமாக விதிக்கப்பட்ட தடை விலக்கிக் கொள்ளப்பட்ட சில மணிநேரங்களில் மீண்டும் தடை என்ற அறிவிப்பால் சுற்றுலா பயணிகள் புலம்பி வருகின்றனர்.
இருப்பினும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிக அளவு தண்ணீர் வருவதால் பொதுமக்களுக்கு எந்த விதமான ஆபத்தும் நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் இதை சுற்றுலா பயணிகள் புரிந்து கொண்டு மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Edited by Mahendran