குற்றால அருவிகளில் குளிக்கலாம்.. மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!
குற்றாலத்தில் உள்ள அருவிகளில் இன்று மாலை முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளதை அடுத்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைகளில் நல்ல மழை பெய்ததை அடுத்து குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, தேனருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் கொட்டியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதனை அடுத்து தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்ததை அடுத்து திடீரென அருவியில் வெள்ளம் ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மேலும் இந்த வெள்ளத்தில் 17 வயது சிறுவன் அடித்து செல்லப்பட்டு உயிர் இழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக படிப்படியாக குற்றாலம் அருவிகளில் நீர் வரத்து குறைந்ததை அடுத்து இன்று மாலை முதல் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் அறிவித்துள்ளார்
இருப்பினும் மெயின் அருவியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் அங்கு மட்டும் குளிப்பதற்கு அனுமதி இல்லை என்றும் மற்ற அருவிகளில் சுற்றுலா பயணிகளை குளிப்பதற்கு அனுமதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது . இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Edited by Mahendran