ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 29 மே 2019 (19:26 IST)

முதல்வர் பழனிச்சாமியுடன் வைத்திலிங்கம் எம்பி சந்திப்பு: மத்திய அமைச்சர் உறுதியா?

மீண்டும் பிரதமர் பதவியேற்கும் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் சிவசேனா, அகாலிதளம், ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜன சக்தி, அதிமுக ஆகிய கூட்டணி கட்சிகள் இடம்பெறும் என்று தகவல்கள் வெளிவந்த நிலையில் அதிமுக கூட்டணியில் வெற்றி பெற்ற ஒரே எம்பியான ரவீந்திரநாத் குமாருக்கு அமைச்சர் பதவி பெற்றுத்தர துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தீவிர முயற்சி செய்து வருகிறார்.
 
ஆனால் முதல்வர் பழனிச்சாமி தரப்போ அதிமுக மூத்த எம்பி ஒருவருக்குத்தான் அமைச்சர் பதவி கேட்டு வாங்க வேண்டும் என்று கூறி வருகிறார். அந்த வகையில் அதிமுக எம்பி வைத்திலிங்கம் அவர்களுக்குத்தான் அமைச்சர் பதவி கிடைக்கும் என கூறப்பட்டது. இந்த நிலையில் சற்றுமுன் சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியை அதிமுக எம்பி வைத்திலிங்கம் சந்தித்து பேசினார். மத்திய அமைச்சரவையில் வைத்திலிங்கத்திற்கு வாய்ப்பு கிடைக்கலாம் என கூறப்படும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது
 
இந்த நிலையில் தனது மகனுக்கு இணை அமைச்சர் பதவியாவது பெற்றுத்தர வேண்டும் என்பதில் ஓபிஎஸ் தீவிரமாக இருப்பதாகவும், இதற்காக அவர் டெல்லி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. ஓபிஎஸ், ஈபிஎஸ் கோஷ்டி மோதலால் மொத்தத்தில் அதிமுகவுக்கு அமைச்சர் பதவியே கிடைக்காமல் போகவும் வாய்ப்பு இருப்பதாக அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.