பண்றதெல்லாம் பண்ணிட்டு அப்பாவி வேஷம்: திமுகவை சாடிய அதிமுக!
மேற்படி ஊராட்சி மன்றத்தலைவர் ராஜேஸ்வரியை தரையில் அமர வைத்ததே திமுகவை சேர்ந்தவர் தான் என அதிமுக அமைச்சர் குற்றச்சாட்டு.
தேனி கீழவடகரை பகுதியில் நடந்த ஊராட்சி மன்ற கூட்டத்தில் பட்டியலினத்தை சேர்ந்த பெண் ஊராட்சி தலைவரை தரையில் உட்கார வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக இருவரை போலீஸார் கைது செய்துள்ள நிலையில், இதுகுறித்து பலரும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக திமுக தலைவர் ஸ்டாலின், திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுத்து ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஊராட்சி மன்றத்தலைவர் ராஜேஸ்வரியை தரையில் அமரவைத்தது திமுக கட்சியை சேர்ந்தவர் தான் என தெரிவித்துள்ளார். அவர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகில் உள்ள தெற்குதிட்டை ஊராட்சி மன்றத்தலைவர் ராஜேஸ்வரியை தரையில் அமரவைத்த கொடுஞ்செயலுக்கு கண்டனம் தெரிவிப்பதாக மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு திமுகவில் தலை விரித்தாடும் சாதிய வன்மங்களை மறைப்பதற்கு பெருமுயற்சி எடுத்திருக்கிறார்.
மேற்படி ஊராட்சி மன்றத்தலைவர் ராஜேஸ்வரியை தரையில் அமர வைத்ததே துணைத்தலைவரான திமுகவை சேர்ந்த மோகன்ராஜ் என்பது தான் உண்மை. இப்படி தீண்டாமை கொடுமைக்கு காரணமான திமுக பின்னணியை மறைத்ததோடு, சாதிய வன்மத்தோடு நடந்து கொண்டவரை காப்பாற்றுவதற்கும் பெரும் முயற்சி செய்துவிட்டு ஆளும் இயக்கத்தின் மீது பழிபோட்டு அரசியல் நடத்த திமுக தலைவர் முயற்சித்திருப்பது பித்தலாட்டத்தின் உச்சமாகும் என தெரிவித்துள்ளார்.